Latest News

April 01, 2015

தேசிய நிறைவேற்றுச் சபை கூடுகின்றது! ஜே.வி.பி. வெளியேறலாம்?
by Unknown - 0


மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் அதி உயர் சபையான தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டம் மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேள்விகளை எழுப்புவார். நிறைவேற்று சபையிலிருந்து வெளியேறுவது என்ற முடிவையும் ஜே.வி.பி. எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் உள்ளிட்ட விடயங்களால் புதிய அரசாங்கம் மீது ஜே.வி.பி. கடுமையாக அதிருப்திகொண்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே தேசிய நிறைவேற்றுச் சபையில் இருந்து ஜே.வி.பி. வெளியேறுவதற்கான சாத்தியமே அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  தேசிய நிறைவேற்றுப்பேரவை என்பது ஒரு மாயை என ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அமைச்சரவை நியமனத்துக்கு எதிராக இதன்போது கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.திசாநாயக்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டமையால் சந்திரிகா கடும் சீற்றமடைந்திருக்கின்றார். சந்திரிகாவை நிர்வாணமாக வீதியில் ஓடச் செய்யப்போவதாக எஸ்.பி.திசாநாயக்க தேர்தல் பிரச்சாரங்களின் போது உரையாற்றியிருந்தார்.

இருந்தபோதிலும், கடந்த வாரம் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கப்பட்டபோது எஸ்.பி.திசாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் பின்னணியிலேயே அவர் அமைச்சராக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

அத்துடன் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்தும் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளார்.

எனவே இன்று நடைபெறும் நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன என்பதுடன் முக்கிய அரசியல் முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன என்றும் அறியமுடிகிறது.

கடந்த வாரம் இடம்பெற வேண்டிய நிறைவேற்றுச் சபையின் கூட்டம் இறுதிவேளையில் காரணம் சொல்லப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.  இருந்தபோதிலும், அதுவும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று வியாழக்கிழமை காலை கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

« PREV
NEXT »