Latest News

April 28, 2015

ஜெயலலிதா வழக்கின் புதிய அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா
by admin - 0

பி.வி.ஆச்சார்யா
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சர்யாவை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார்.

அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சர்யாவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

எதற்காக இந்த நியமனம்?

ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் கர்நாடக அரசும், அன்பழகன் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அன்பழகன் தரப்பில் 81 பக்கங்களில் எழுத்துப்பூர்வ வாதம் நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாட்க அரசு இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் தேவை. எனவே பி.வி.ஆச்சார்யா இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாலை 4.30 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.வி.பாட்டீலிடம் எழுத்துப்பூர்வ வாதத்தை கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்கிறார்.

யார் இந்த ஆச்சார்யா?
பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருட வாழ்க்கையில், 60 வருடங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர்.
ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் தன்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தனது சுயசரிதையில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments