தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆந்திர டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிமன்றம், ஆந்திர போலீஸ் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 302வது பிரிவின் கீழ் ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதே நியாயம் வழங்குவதாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், காவல்துறை உயரதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அதில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டு கொன்றது போலி என்கவுன்ட்டராக இருக்கும்பட்சத்தில் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
No comments
Post a Comment