அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது சரியா, தவறா என்பது குறித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும், தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது.
இந்த வழக்கிலும், பவானிசிங்கே ஆஜரானார். இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். குமாரசாமி கோர்ட்டிலும், கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் அவர் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால் அவரது அனைத்து கோரிக்கைகளும் இங்கு தள்ளுபடியாகி விட்டன. தற்போது மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்து இருக்கிறார். இதனிடையே பவானிசிங்கை நீக்கவேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் கடந்த 15-ந் தேதி அவர்கள் தீர்ப்பளித்தபோது ஆளுக்கு ஒரு தீர்ப்பை அளித்தனர். பவானி சிங்கின் நியமனம் செல்லும் என்று நீதிபதி பானுமதியும், செல்லாது என்று மதன் பி.லோகுரும் தீர்ப்பளித்தனர்.
முரண்பட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை நீதிபதி எச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது. சிக்கலான நீதிபதி முன்பு நாளை விசாரணையைத் தொடங்கவுள்ள 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை வகிப்பார்.
இந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏற்கனவே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஒரு மனுவை 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தவர் ஆவார். அப்போது ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி கூறுகையில், விசாரணையை கேலிக் கூத்தாக்க முயல்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் நோக்கம் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கடுமையாக சாடியிருந்தார். தற்போது அதே நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comment
அம்மாக்கு ஆப்பா
Post a Comment