Latest News

April 24, 2015

பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் - 2015
by admin - 0


2009ல் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்துக்கூடாக ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயல்பாட்டளர்கள்  தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உச்சமட்ட மன்றமான நாடு தழுவிய 'தேசிய அவைக்கு  (National Assembly)' 2015க்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யும் தேர்தல் நடைமுறை ஆரம்பித்துள்ளது.
 
ஐக்கிய ராச்சியம் எங்கும் உள்ள 21 உள்ளூர்  தமிழர் பேரவைகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகரீதியான ஆணையைப் பெற்று இக்கட்டமைப்புக்கள் செயல்பட்டு  வருகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் தமிழர் பேரவைகள் ஒவ்வொன்றும் 'தேசிய அவைக்கு' தமது பிரதிநிதிகளை அனுப்புவார்கள். முடிவெடுப்பதில் பங்கெடுக்கும் பங்கேற்பு ஜனநாயக  (Participatory democracy) முறையில் பிரித்தானிய தமிழர் பேரவை செயல்பட்டு வருகின்றது. 
 
ஜனநாயகம் வெளிப்படைத்தன்மைஇ பொறுப்புக்கூறல் என்ற விழுமியங்களை ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்து மிகப்பெரிய புலம்பெயர் தமிழர் அமைப்பாக செயல்படுகின்ற பிரித்தானிய தமிழர் பேரவைஇ வருடாந்தம் நடைபெறும் பிரதிநிதிகள் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. உள்ளூர்  தமிழர் பேரவைகளுக்கான தேர்வுகள் நடைபெறும் விபர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த காலங்களைப் போல இந்த வருடமும் இக் காலப் பகுதியில் இவ்வாறான உள்ளூர்  தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களுக்குக் கொண்டு செல்லவும் இந்தச்  செயல்பாடு  மிக முக்கியமானதாகும். 
 
புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய எமது பக்கம் சர்வதேச சமூகம்  திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றோம். எம் தொடர்ச்சியான செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் ராஜபக்ஸ அரசின் கொடூரமான அத்தியாயங்களை வெளிக் கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகள் இலங்கையில் ஆட்சி மற்றம் கொண்டு வருமளவிற்கு தமிழர்களின் செயல்பாடு காத்திரமானது. 2009இன் பின் 6 வருட காலத்தில் புலம்பெயர் மக்களின் செயல்பாடுகள்தான் உலகின் கவனத்தினை இலங்கை மீது திருப்பியது. இல்லாவிடின் தமிழர் மீதான வதை படலம் மிகப் பெரிய அளவில் யாருமறியாமல் தொடர்ந்திருக்கும். 

ஆயினும் தமக்கு சாதகமான தற்போதைய ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாக்கவும் தமிழர் கோரும் சர்வதேச விசாரணையைக் கைவிடவும் வல்லாதிக்க சக்திகள் தற்போது வியூகம் வகுத்துள்ளன. ஒன்றிணைந்த மக்கள் சக்தியே இவ் வியூகத்தினை உடைத்தெறியும். அநீதியை உலகின் முன் அம்பலப்படுத்தும். 

இந்த அடிப்படையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பங்கு மிக முக்கியமானது. பலம் பொருந்திய மக்களின் பிரதிநிதிகளாக சர்வதேசத்திடமும் மானுடத்தை நேசிக்கும் சக்திகளிடமும் நாம் செல்லும் போது எம் பக்கமுள்ள நியாயப்பாட்டினை தட்டிக் கழிக்க முடியாது. இதைப்புரிந்து கொண்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைவதன் மூலம் சிறீலங்கா அரசின் சதியை ஜனநாயக ரீதியில் நாம் முறியடிப்போமாக! மக்கள் எம்முடன் இணையும் போது எமது ஜனநாயகரீதியான போராட்டம் தமிழ் மக்களின் பலம்வாய்ந்த போராட்டமாக அமையும். எம் மக்களின் விடுதலைக்கான பாதையை அகலத் திறக்கும்.

மேலதிக தொடர்புகளுக்கு

பிரித்தானிய தமிழர் பேரவை

« PREV
NEXT »

No comments