யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் துணைபோயிருப்பதாகக் குற்றம் சுமத்தி அவர்களின் இந்த நடவடிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமாகிய சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்த்தப்பட்டுள்ள உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்ட நடவடிக்கைகள் நியாயமற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என சுட்டிக்காட்டி, இந்த மத்தியகுழு அவற்றைக் கண்டித்துள்ளது.
அனந்தி சசிதரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் ஊடகப் பேச்சாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி பெருந்தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது குற்றம் சுமத்தி, அவர் மீது கேள்வி எழுப்பி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சியின் மத்திய குழு கோரியிருக்கின்றது.
அத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை வவுனியாவில் ஞாயிறன்று கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், உருவப் பொம்மை எரிப்புக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
விமர்சனம் என்பது கூட, அரசியல் கருத்து குறித்த விமர்சனமே ஒழிய அவை தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி BBC Tamil
Social Buttons