ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று இடதுசாரி சோசலிஷ முன்னணித் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
“ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்க பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமர், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு எதிரானது.
நீதிமன்றத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனநாயக விரோத செயல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான ஜனநாயக விரோத செயலிலீடுபட்டதில்லை. இதனால் தான் அவரை மீண்டும் பதவியில் நிறுத்த முயற்சி செய்கின்றோம் என்றார்.
இங்கு உரையாற்றிய உதய கம்மன்பில (மேல் மாகாண சபையின் ஐ.ம.சு.கூ. உறுப்பினர்) கூறியதாவது,
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த இரத்தினபுரி கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இங்கு வருகை தந்த ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்க அல்லது தண்டனை வழங்கப்போவதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன கூறி வருகின்றார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு யார்? ராஜித்தவிற்கு தண்டனை வழங்க என்ன உரிமையுள்ளது?
அவ்வாறு ஸ்ரீல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கினால் மக்கள் தண்டனை வழங்கியவர்களுக்கு தண்டனை வழங்குவர். 1959.09.21 அன்று முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவை கொலை செய்தவர்கள் தான், அக்கட்சியையும் கொலை செய்தனர். இவ்வாறு கொலை செய்தவர்களுக்கு ஸ்ரீல.சு.க. என்ன தண்டனை வழங்கியது?
19 ஆவது அரசியலமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளவே ஸ்ரீல.சு.கட்சிக்கும் அமைச்சர் பிரதி அமைச்சர் பதவிகள். மக்களையும், நாட்டையும் ஏமாற்றவே இந்த 19ஆவது அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது.
Social Buttons