Latest News

March 29, 2015

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் நினைவு வணக்க நிகழ்வு
by admin - 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன்
தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் நிகழ்வுப்பேருரையும் இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.Mamanithar-Sivanesan-V-copy-600x849

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எ. ஆனந்தராசா தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வு இன்றைய தினம் மாலை 4 மணிக்கு பருத்தித்துறை சிவன்கோயில் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் வரவேற்புரையை பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் வின்சன் டீ. போல் வழங்கவுள்ளார்.

‘சமகால தமிழ்த் தேசிய அரசியலின் சவால்களும் வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் அமைந்த நினைவுப் பேருரையை அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் சிறந்த மனிதர் சிவனேசன் ஆவார். அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஜனநாயகவாதியாகக் காணப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் அவர்கள் 21.01.1957ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்ற இவர் தனது க.பொ.த உயர் தரக் கல்வியை யாழ். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.

பின்னர் கூட்டுறவுத்துறையில் தனது உயர் கல்வியை பூர்தி செய்ததுடன் யாழ். மாவட்ட பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கணக்காளராக 1988-1990 வரை பதவி வகித்ததுடன் 1991- 1995ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அச் சங்கத்தினுடைய பொது முகாமையாளராக பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து வட பிராந்திய பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தின் பொது முகாமையாளராக 1996-2004 வரை பணி புரிந்தார்.

2004 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெருமளவு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியில் வசித்து வந்த இவரும் இவரது குடும்பமும் படையினரின் கெடுபிடி காரணமாக அங்கு வாழ முடியாத நிலையில் ஏ9 பாதை மூடப்படுவதற்கு முன்னதாக வன்னிக்கு இடம் பெயர்ந்து மல்லாவியில் வசித்து வந்தனர்.

கடந்த 04.03.2008 இல் நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலும், அடுத்த நாள் புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்திலும் கலந்து கொண்டு இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கெதிராக வாக்களித்துவிட்டு (06.03.2008) வியாழன் அன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பில் மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவின் மல்லாவியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஏ9 வீதி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையிலான பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி வியாழக்கிழமை (06.03.2008) பிற்பகல் 1.10 மணியளவில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »