Latest News

March 08, 2015

தமிழ் பெண்களின் நிலை தொடர்கதையாகிறது !
by Unknown - 0

மாச்மாதம் 8ம் திகதியை அனைத்துலக பெண்கள் தினமாக உலகம் கொண்டாடிவரும். வேளையில் சிறிலங்கா சிறைகளில் பெருந்தொகையான தமிழ் பெண்கள் அடைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அவர்கள்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில், எவ்வித நீதி முறைமைகளுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காணாமல்போன பெண்களைத்தேடி உறவினர்கள் இன்னமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இராணுவத்தினரின் காமஇச்சைக்குப் பலியான பலநூறு பெண்களுக்காக நீதிவேண்டி சமூக அமைப்புக்கள் பற்பல போராட்டங்கள் நடத்தியும் பலனேதும் கிடைக்க வில்லை இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அவர் மேலும் தொடர்கையில் சிறிலங்காவில் தமிழர்கள் சாதகமாக வாக்களித்த காரணத்தால் சமீபத்தில் பதவிக்குவந்துள்ள புதிய அரசாங்கமும் தமிழ் பெண்கள் படும் அவலங்களை புறக்கணித்தே வருகிறது என்றார்.

காணாமல் போனோர் குறித்த போராட்டங்களில் உணர்வோடு பங்குபற்றி ஒட்டுமொத்த தமிழினத்தின் உணர்வலைக்கு எடுத்துக்காட்டாக தாய் ஜெயக்குமாரி பாலேந்திராவும், பதின்மூன்றே அகவையுடைய அவரது மகள் விபூசிகாவும் விளங்கினார்கள்.  தமது குடும்ப அங்கத்தவர்கள் நான்குபேரை எமது இனவிடுதலைக்கு விலையாக்கிய வீர மறவர்கள். ஜெனீவா சென்று தமது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தி, சிறிலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது காலாகாலமாக கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையை உலகின் கண்கள்முன் நிறுத்துவதற்கும் ஆயத்தமாகிவந்த சமயத்தில் கடந்த ஆண்டு (2014) பங்குனி மாதம் இருவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

இராணுவத்தின் உத்தரவின்பேரில் தாய் ஜெயக்குமாரியின் முன்னிலையில் சரணடைந்த அவரின் பதினைந்து வயது மகன் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை. அப்படியொரு நபர் தமது பாதுகாப்பில் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் கைவிரித்துவிட்டது. ஆயினும், இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட வெளியீடொன்றில் அவரது மகனின் படமும் காணப்படுவது குறிப்பிட வேண்டியது.

அப்பாவித் தமிழர்கள் வகைதொகையின்றி கொன்றொழிக்கப்பட்ட யுத்தத்தின்போது இறுதியில் சிறிலங்காவின் பதில் பாதுகாப்பமைச்சராக பணிபுரிந்த தற்போதைய ஜனாதிபதியோ, ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு உரித்தான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுத்துள்ள நிலையில், தமிழர்கள்மீது யுத்தக் குற்றம், மனிதநேயத்திற்கெதிரான குற்றம், இனப்படுகொலை புரிந்த  குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச அளவில் ஆளாகியுள்ள இராணுவத்தினருக்கு இவ்வதிகாரங்களை வழங்கியுள்ளமை ஜனநாயக விரோத செயலாகும்.

சிறிலங்காவின் கிழக்குமாகாணத்தில் திருகோணமலையில் கோத்தபாயாவின் இரகசிய தடுப்பு முகாம் ஒன்றில் 700க்கும் அதிகமான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பாவனைப்படுத்திய எண்ணெய்க் கழிவு, இரசாயனக்கழிவு முதலியவற்றை குழிகளில் கலந்து விடுவதன் மூலம் நிலக்கீழ்நீர்வளம் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவருகிறது. சுற்றாடலில் உள்ள கிணறுகளில் இதன் தாக்கம் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

பலவருடங்களாக மாசடைந்த நீரைப் பருகியதால் மக்கள் நோய்வாய்ப்பட்டும் பிறக்கும் குழந்தைகள் பலதரப்பட்ட குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு இது கொண்டுவரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவத்தினரின் மனிதநேயமற்ற இந்நடவடிக்கையும் அரசாங்கத்தின் அசமந்தப் போக்கும் குறிப்பிட்ட மக்களை சுற்றுவட்டாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் இரகசிய இனச்சுத்திகரிப்புத் திட்டத்தின் அம்சமோ என மக்கள் அஞ்சுகின்றார்கள். என்றும் அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அரசாங்கம் மாறியும் தமிழர்படும் இன்னல்களில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.


« PREV
NEXT »