சிறீலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உண்மை நிலையை வெளியிடக்கோரி நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஈழத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்தினை வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனோரின் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு இதற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் மகளீர் அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போராட்டத்தில் சிறீலங்கா மீதான ஐ.நா விசாரனையை வலியுறுத்தியும் அறிக்கை பிற்போடப்பட்டமை குறித்து கண்டித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப் படவுள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல் மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப் படவுள்ளன.
ஈழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு போர்க்குற்றம் போன்றவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபை விசாரணை ஒன்றினை மேற்கொண்டிருந்தது. இவ் விசாரணையின் அறிக்கை வெளியிடப்படவிருந்த நிலையில் மனிதவுரிமைகள் ஆணையாளரினால் பிற்போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்தும் ஆணையாளர் கூறியபடியே அறிக்கையினை செப்டெம்பர் மாதம் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடைபெறவுள்ளது.இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று மாலை முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகிய நடை பவனியும் இவ் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் நாளை காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகும் இத்தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளதோடு இறுதியில் வடமாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் உண்ணாவிரத போராட்டத்தினை முடித்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
Social Buttons