Latest News

March 02, 2015

எதிர்கால விவசாய கல்வி: இலத்திரனியல் கருத்தரங்கு
by admin - 0

உலகெங்கும் வாழும் நம்மினிய உறவுகளை இணைப்பதற்கான வழியொன்று மீண்டும் வந்திருக்கின்றது. வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தில் வெள்ளிவிழா சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக எதிர்கால விவசாய கல்வி பற்றிய இலத்திரனியல் கருத்தரங்கினை நடாத்த கருத்தொருமித்து அதற்கு கருவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கான தலைப்பு காலத்தைக் கருத்தில் கொண்டு கருத்திலெடுக்க வேண்டியதொன்றாகும். இலத்திரனியல் கருத்தரங்கினை சென்றவருடம் பல்கலைக்கழக உலகளாவிய மாநாட்டுக்கு நெறிப்படுத்திய அனுபவத்தை வைத்து அன்புக்கட்டளை எழுதும் இக்கைகளுக்கு இடப்பட்டிருக்கின்றது. ‘எதிர்கால விவசாய கல்வி’ பற்றி தற்போது கலந்தாலோசிக்க அவசியமேற்பட்டிருப்பது விவசாய பீடத்தின் எதிர்கால நலனுக்குகந்ததாகவே கருதலாம். இதனை 1980 களில் விவசாய பீடத்தை உருவாக்கும் போது கவனத்திற்கொண்டிந்தார்கள் என்பதனையும் இதில் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்.

 எமது பிரதேசம் ஒரு விவசாய பூமி என்பதனை அடிக்கடி ஞாபகப்படுத்தும் நிகழ்வுகள் இம்மண்ணில் நிகழ்ந்துகொண்டிருப்பது தான் விசித்திரமானதாக இருக்கின்றது. இருப்பினும் நாம் வாழும் பிரதேசத்தின் நலனைக்கருத்தில் கொண்டும் எமது வருங்கால சந்ததியின் வளமான வாழ்வினை அடிப்படையாக வைத்தும் காலத்திற்கு காலம் நாம் கற்றுக்கொடுக்கும் கல்வியை மாறிவரும் சூழலுக்கேற்ப மாற்றியமைத்து சிறப்பான கல்வியை, வேலைவாய்ப்பை விரைந்து கொடுக்கக்கூடிய கல்வியை, தனியார்துறையினை வளர்த்தெடுக்கக்கூடிய கல்வியை, சூழலுக்கிணைவான தொழில்நுட்பத்துடனான கல்வியை நாம் வழங்கவேண்டியவர்களாவோம். 

ஒருவகையில் பார்த்தால் இது காலத்தின் கட்டாயமுங்கூட. விவசாய பீடத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் காலம்தாழ்த்தாது வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான திட்டங்களை தீட்டவேண்டியதும் அவசியமானதாகும்.

விவசாய கல்வியானது விவசாயபெருமக்களுக்கு கிடைப்பதில்லை என்னும் குறை நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வு கிடைக்க வழிவகைககள் முழுமையாக செய்யப்படவில்லை. எமது பிரதேச வளங்களை அடிப்படையாக வைத்து அவற்றை வினைத்திறனான முறையில் பயன்படுத்தவும் அதே நேரத்தில் அவற்றை அழிந்து விடாது பாதுகாக்கவும் இதனூடாக முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் விவசாய கல்வியானது மற்றைய பல்கலைக்கழகங்களில் நடைமுறையிலிருக்கும் கல்வித்திட்டத்தை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது. பிந்திய காலங்களில் விவசாய கல்வியில் தொழில்நுட்ப அறிவும், தொழிலறிவும் இன்னும் அனுபவ அறிவும் பாடத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தபோது அதனை சாதகமாக பரிசீலித்தார்கள். 


கல்வி கற்பவர் படுகின்ற சந்தோசத்தை விட கல்வி கற்பித்தவர் பட்டிருக்கின்ற சந்தோசமே இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒருபக்கம் விவசாய வளத்தை அதன் பேராண்மையை உயர்வடையச் செய்யும் நிகழ்ச்சி நிரல்களோடு மறுபக்கம் வெளியேறும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் விவசாய கல்வி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உள்வாங்கப்பட்டிருப்பது நல்லசகுனமே. விவசாய கல்வி பாடத்திட்டத்தில் சமகால தேவைக்கான மாற்றம் அவசியமாகின்றது. 


இந்த மாற்றம் தேசத்தின், மாகாணத்தின் இன்னும் மாவட்டத்தின் இன்னும் ஒருபடி மேலே போய் அபிவிருத்திக் கொள்கையில், அதன் முன்னேற்றத்தில் பங்களிக்குமாயின் மாற்றத்தின் நோக்கம் உயர்வுக்குரியது. 

உழைப்பு உன்னதமானது. அந்த எதிர்பார்ப்புக்களுடன் விவசாயத்தின் எதிர்காலம் திட்டமிடப்படுகின்றது, இன்னும் எதிர்வு கூறப்படுகின்றது. காலநிலை மாற்றத்தை நாம் எவ்வாறு எதிர்வு கூற முடியவில்லையோ அதேபோல இந்த மாற்றமும் அமைந்துவிடக்கூடாது. இதனை கருத்திற்கொண்டும் இலத்திரனியல் மாநாடு ஒழுங்குசெய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் சிறப்பு அரையாண்டு கல்வித்திட்டத்தை எமது பல்கலைக்கழகத்தில் துணிந்து அறிமுகப்படுத்தியதோடு ஆரம்பமாகியது எனலாம். சிறிய பீடமென வருணிக்கப்பட்டாலும் ஆரம்பமாகும் போதே கல்விச் சீர்திருத்தத்தின் நடப்பு நிகழ்வான அரையாண்டு திட்டத்தை உள்வாங்கிய பாடஅலகுகளோடு ஆரம்பமானதை பெருமையோடு பதிவுசெய்வதில் மனம் மகிழ்கின்றது. தற்போது நடைமுறையிலிருக்கும் அரையாண்டு கல்வித்திட்டம்  முழுமையாக பரீட்சித்துப்பார்த்த இடமாகவும் விவசாய பீடம் அமைந்திருக்கின்றது. 1990இல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் முழுமையாக இருதடவைகள் விவசாயகல்வி பாடத்;திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. 


தற்போது இன்னொருமுறை விவசாய கல்வித்திட்டத்தை மாற்றியமைக்க முனைந்திருக்கின்றோம். இந்த மாற்றம் இங்கு கல்விகற்று வெளியேறியவர்கள், மற்றும் அவர்களை வேலைக்கமர்த்தியவர்கள், உயர்கல்விக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் மற்றும் சுயமாக வேலைசெய்ய முனைந்தவர்கள் ஆகியோருடைய கருத்துக்களை உள்வாங்கியே செய்யப்பட வேண்டும். இதற்காக இவ்வாறான இலத்திரனியல் கருத்தரங்கு நடாத்தப்படுவது சிறப்புக்குரியது. பாரெங்கும் பரந்து வாழும் எவரும் குறிப்பாக எமது பட்டதாரிகள் அனைவரும் இணையத்தளமூடாக இணைக்கப்படும் கருத்தரங்காக இது அமைவதனால் அனைவரினதும் வலுவான காத்திரமான கருத்துக்களை செவிமடுக்க இக்கருத்தரங்கு வழிசமைத்திருக்கின்றது. நாமும் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். 


சமூக வலைப்பின்னலின் கண்டுபிடிப்பும் ஆளுமையையும் இவ்வாறான முக்கிய நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்;படுவது குறிப்பிடத்தக்கது.

இலத்திரனியல் கருத்தரங்கில் ‘எதிர்கால விவசாய கல்வி: முன்னோக்கிய பார்வை’ என்னும் கருவை மையப்படுத்தி கலந்துரையாட முனைகின்றோம். வெறுமனே விவசாய கல்வியென்பது புத்தகபூச்சிகளாக எமது மாணவர்களை ஆக்கிவிட முனைகின்றது. இதனை மாற்றியமைத்து அவர்களை தனித்துவமாக, சுயமாக, தொழில்நிறுவனங்களையுருவாக்கும் சிற்பிகளாக ஆக்கிவிட முனைகின்றோம். இருபத்தைந்து வருடங்களாக நாம் பெற்ற அனுபவமனைத்தும் இதில் முழுமையாக பயன்படுத்தி விவசாய பட்டதாரிகளை தொழில்தருநர்களாக மாற்றயமைக்க இக்கருத்தரங்கின் கலந்துரையாடல்கள் நிச்சயமாக பயன்படும். உலகளாவிலும் பரந்து வாழும் எமது பீடத்தின் விதைகள் உங்களின் கருத்துக்களுக்கு முழுசுதந்திரமளித்து இந்த இலத்திரனியல் கருத்தரங்கில் பங்குபற்ற அழைக்கின்றோம். இன்னும் விவசாயதுறைசார்ந்த புலமையாளர்கள், விவசாய பெருமக்கள், தொழிற்றுறை வல்லுனர்கள், மாணவர்கள், அனைவரும் பங்குபற்றும் கருத்தாடுகளமாகவே இந்த கருத்தரங்கை ஒழுங்கு செய்கின்றோம். உங்கள் புதிய எண்ணங்கள், புதிய உத்திகள், சிந்தனைச்சிதறல்கள், ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அனைத்தையும் இவ்வரலாற்று நிகழ்வில் பதிவுசெய்ய இருக்கின்றோம். விவசாய கல்வியின் எதிர்காலமும் விவசாய கல்வி எந்த திசைநோக்கி நகரவேண்டும் என்பதையும் உங்களிடமிருந்து பெற்று அதனை ஆலோசித்து உயர்வடைய விவசாய பீடம் அழைக்கின்றது.

விவசாய கல்வி பல்துறைசார்ந்ததாக இருக்கவேண்டும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. வளங்கள் பற்றி அடிப்படையறிவும் பயன்பாடும் விவசாயபீடத்திலிருந்தும் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்திலிருந்தும் முகாமைத்துவம் முகாமைத்துவம் மற்றும் வணிக பீடத்திலிருந்தும் அடிப்படைவிஞ்ஞானம் விஞ்ஞான பீடத்திலிலிருந்தும் உள்வாங்கப்பட்டால் பல்துறைசார்ந்து முழுமையான பட்டதாரியை விவசாய பீடம் உருவாக்க முடியும் என பலர் எடுத்துரைத்திருக்கின்றனர். இதனை திட்டமிட்டு வடிவமைத்து செயலாக்க வேண்டும். இதற்காக பலரும் இணைந்து உழைக்க வேண்டும். புலம்பெயர்ந்து புலமையாளர்களாக இருக்கும் எம்மினிய உறவுகளின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களையும் இணைத்து விவசாய கல்வியை முன்மாதிரியான கல்வியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

விவசாய பீடத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அம்பாந்தோட்டையிலமைந்துள்ள விவசாயதொழில்நுட்ப அலகினால் வழங்கப்படும் டிப்புளோமா மற்றும் உயர்டிப்புளோமா ஆகிய கற்கை நெறிகளை தமிழில் இணையவழியூடாக கற்க ஆவனசெய்தல் நன்று. விவசாயத்திலீடுபட்டிருக்கும் இளவயதினருக்கு கல்வியை வழங்கும் இந்நோக்கம் அவர்களை இன்னும் சிறப்பாக விவசாயசெய்கையிலீடுபடுத்த உதவும்.

தற்போதிருக்கும் விவசாய கல்வியுடன் புதிதாக இரண்டு விவசாய கற்றைநெறிகளை விவசாய பீடம் அறிமுகம் செய்கின்றது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்காக உருவாக்கப்படுகின்றது. உணவுற்பத்தி தொழில்நுட்பம் (குழழன Pசழனரஉவழைn வுநஉhழெடழபல) மற்றும் வர்த்தக பசுமைப் பண்ணை (ஊழஅஅநசஉயைட புசநநn குயசஅiபெ) ஆகிய இரு கற்கை நெறிகள் இனங்காணப்பட்டு அவற்றிற்கான கல்வித்திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்விரு கற்றைநெறிகளில் தெரிவாகி கற்று வெறியேறும் மாணவர்கள் சுயமாக தொழிற்றுறையை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கக்கூடியவர்களாக உருவாகவேண்டும்.

வடபகுதியில் முழுமையான ஆய்வுகூடவசதிகள் இன்னும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை. விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தினால் ஆய்வுசெய்வதற்கான ஆய்வுகூடங்கள் இரணைமடு சந்தியிலமைந்துள்ள அவர்களது பிராந்திய நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை விவசாய கல்வியை பலப்படுத்த முனைவதற்கான நல்லசெய்தி. விவசாய ஆராய்ச்சி, விவசாய விரிவாக்கம் மற்றும் கமநல திணைக்களம் இவற்றுடனிணைந்து விவசாய பீடமும் முழுமையாக இணைந்து செயலாற்றினால் நாம் எதிர்பார்க்கும் பரந்தறிவுள்ள பட்டறிவுள்ள விவசாய கல்வியை நாம் வழங்கமுடியும்.

சமகாலத்தில் உயர்வுபெறும் தொழில்நுட்பங்களை நாம் உள்வாங்க தவறக்கூடாது. எமது அயல்நாடான இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பவளர்ச்சியை நாம் முழுமையாக உள்வாங்க வாய்ப்புக்கள் நெருங்கிவந்துள்ளன. இந்தியாவிலுள்ள விவசாயஞ்சார்ந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது விவசாய கல்வியை முழுமையான அனுவகற்றலுடனான கல்வியாக மிளிரச்செய்யமுடியும். இதற்காக யாழ்ப்பாணத்திலமைந்திருக்கும் இந்திய துணைதூதுவராலய பணிப்பாளர் உயர்திரு நடராஐன் அவர்களுடனான ஆக்கபூர்வமான சந்திப்பு பலவிடயங்களில் கல்விசார்ந்து நாம் உதவிகளை பெற வழிகோலியிருக்கின்றது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் விவசாயத்தில் முதன்மையான பீடமாக நாம் பரிணமிக்க வேண்டும். இந்த குறிக்கோளைநோக்கி நாம் நடைபயில ஆயத்தமாகியுள்ளோம். முழுமையாக பட்டறிவு கல்வியை விவசாயத்தில் நாம் வழங்கினாலன்றி இக்கற்கைநெறியின் பயன்பாடு முழுமைபெறாது. இங்கே உயரத்துடிக்கும் கிராமங்களின் வளர்ச்சியையும் எமது அனுபவமாக்கி கொள்ள முனைகின்றோம். வன்னிபகுதியில் கல்மடு நகரி; சுதேசிய மருத்துவத்திற்கான வைத்தியசாலையுடனான மூலிகை கிராமம் உருவாகின்றது. இக்கிராமத்தை தொழில்நுட்ப கிராமமாக மாற்ற முனைவோம். சிறு துளி பெருவெள்ளம். கற்றதை செயலில் காட்டும் காலம் நெருங்கி வந்திருக்கின்றது. நாமும் உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவோம். வாருங்கள் உங்கள் இணைப்பு எமக்கு என்றும் முக்கியமானது. 

« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved