![]() |
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் |
பேரம் பேசி வாக்குறுதிகளை பெற்றிருந்தாலே தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பலாபலனை அடைந்திருக்கமுடியும். ஆனால் அவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசின் பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வது பற்றி பேசிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில் கூட்டமைப்பின் பதிவு என்பது இப்போதைக்கு ஒன்றும் முக்கியமானதல்ல. அதன் கொள்கையே இப்போது முக்கியமானது.
முன்னர் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த போது பங்காளிக் கட்சிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்தவை தேசியம் தன்னாட்சி, சுயநிர்ணயம் போன்றவற்றை முன்னிறுத்துவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் அதனால் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளது பெரும்பான்மையென்ற வகையில் அதனையே கூட்டமைப்பின் நிலைப்பாடாக முன்னெடுக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது தெரிந்ததே.
ஆனால் இப்போது அதே சம்பந்தன் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் ஜனநாயக ரீதியில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை முன்னிறுத்தியே பதிவு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றார். இப்போது கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்திவருகின்ற நிலையில் இப்போது அவர் கூறுவது எந்தவகை ஜனநாயகமெனவும் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
இவர்களது இராஜதந்திரங்களை நம்பி நம்பி தமிழ் மக்கள் நடுத்தெருவிற்கு வந்து அழிந்தது போதும். இந்த 65 வருட போராட்டம இலட்சியம், நோக்கம், இழப்பு அனைத்துமே வீணானவையல்ல. அவற்றை வீணான இழப்பாகவும் மாற்ற முடியாது. கனவுகள் நனவாக மாற மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
Social Buttons