Latest News

March 11, 2015

40 நாட்களில் மகிந்த ஆட்சியாம்
by admin - 0

உலகின் அனைத்து நாடுகளுடனான சுமுகமான உறவினை பேணுவதற்காக இன்னும் 40 நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆட்சியை பெற்றுக்கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி. பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.


கொழும்பு ஜயந்திபுரவில் அமைந்துள்ள

தேசிய சுதந்திர  முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முன்னர் எமது நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சிறந்த முறையில் பேணப்பட்டு வந்தது. அது போன்றே ஏனைய நாடுகளுடனும் உறவை பேணி வந்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்பு அந்த நிலை மாறியுள்ளது. ஜனாதிபதி விஜயம் செய்யும் ஒவ்வொரு நாடுகளுடனும் உறவை பலப்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்யும் அதேநேரம் இதுவரையில் நல்லுறவு பேணப்பட்ட நாடுகளுடன் உறவு முறிந்துள்ளது.


துறைமுக நகரம் விவகாரத்தில் நாம் இதனை உணர முடியும். இன்று இந்தியாவுடனான உறவுக்காக இடை நிறுத்தப்பட்டுள்ள துறைமுக நகரம் ஜனாதிபதி மைத்திரி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டால் மீண்டும் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்பது உறுதி. அத்துடன் இன்று நாட்டுக்குள் எவ்வித ஐக்கியப்பாடும் இல்லை.


 தேசிய அரசு என்ற பெயரில் ரணில் சோபித தேரர் மற்றும் அனுர போன்றோர் முற்றிலும் வேறுபாடான கருத்துக்களை கொண்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதி பிரதமருக்கு அடிபணிந்து செயற்படுவதும் வருந்தக்கூடியது. 100 நாள் திட்டம் முடிவுற இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு முறையற்ற அரசியல் செய்து வருகின்றனர். ஊழல் முற்றாக ஒழிக்கப்படும் என்று ஆட்சியை பலவந்தமாக பறித்துக்கொண்டவர்களுக்கு ஒழுங்காக ஆட்சி செய்யும் முறை தெரியவில்லை. மஹிந்தவின் குடும்ப ஆட்சி பற்றி பேசினர். இன்று நூறு குடும்பங்கள் இணைந்து செய்யும் ஆட்சியொன்றே உள்ளது.


இவ்வாறு நாட்டினை பிழையான பாதையில் வழிநடத்தி சென்று கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் அதற்கு நல்லாட்சி என்றும் பெயரிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க நாம் மீண்டும் மஹிந்தவை அழைத்து இன்னும் 40 நாட்களில் அவருக்கு ஆட்சியை பெற்றுக்கொடுப்போம். அத்துடன் உலக நாடுகளின் உறவை பேணவும் அவர் போன்ற ஒரு தலைவரே எமது நாட்டிற்கு அவசியம் என்பதை பொதுமக்களும் எமக்கு தெரிவிக்கின்றனர். அதனால் மீண்டும் மஹிந்தவை ஆட்சியிலமர்த்த வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே நாம் செயற்படுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


« PREV
NEXT »

No comments