Latest News

February 07, 2015

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு விஜயம்செய்து விசாரணை செய்ய வேண்டும் - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்
by Unknown - 0

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்து விசாரணை செய்ய வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த விசாரணைக் குழுவினர் இலங்கைக்குள் விஜயம் செய்து விசாரணை நடத்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. புதிய அரசாங்கம் விசாரணைக்குழு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல கூட்டாக இணைந்து கோரியுள்ளன.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, கனடா, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கடந்த காலங்களிலும் இவ்வாறான உள்ளக விசாரணைகள் வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியர்கள் எவ்வித அடக்குமுறைக்கும் உட்படுத்தப்படாது சுயாதீனமாக இலங்கைக்குள் விசாரணை செய்ய வேண்டுமாயின் அதற்கு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவினரை அனுப்பி வைப்பதன் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளன.

ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி சர்வதேச சமூகம் யுத்தக் குற்றச் செயல் குறித்த சர்வதேச விசாரணைளுக்கு புதிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்ட வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 
« PREV
NEXT »