Latest News

February 22, 2015

உள்ளக விசாரணை உண்மையை மறைப்பதற்கான ஏற்பாடே-மன்னார் ஆயர்
by Unknown - 0

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதாக மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல என்று தெரிவித்த ஆயர் பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். 

சிங்கள மக்களிம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதாகவும் ஆயர் தெரிவித்தார். 

தமிழ் மக்கள் தனித்துவமான சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் என்று தெரிவித்த மன்னார் ஆயர் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கு இடமளிப்பதன் மூலமே இந்த நாட்டை அமைதிப்படுத்த இயலும் என்றும் தெரிவித்தார். 

இலங்கை சுதந்திரம் அடைந்தது என்ற விடயத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்பது ஓர் மாயையாக திணிக்கப்பட்டது என்றும் தமிழ் மக்கள் இன்னமும் சுதந்திரத்தை அடையாத நிலையில் வாழ்வதாகவும் அவர் கூறினார். 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மொழி மற்றும் நில அபகரிப்பு என்பது உலக சரித்திரத்தில் ஓர் இனம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அவ்வாறு நடை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையில் நான்கு தடவைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவர நடவடிக்கைகள் இன அழிப்புச் செயற்பாடுகள் என்று தெரிவித்த மன்னார் ஆயர் கட்டமைக்கப்பட்ட அந்த இன அழிப்பு தொடர்ந்து இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். 

மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர் தொடர்ந்தும் இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடாது வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலமையை உருவாக்கியதுடன் அரசாங்கமே அவ்வாறு மக்களை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதமாகவும் மன்னார் ஆயர் சுட்டிக்காட்டினார். 

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

புதிய இலங்கை அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கானது என தான் நம்பவில்லை என தெரிவித்த ஆயர் அவை உண்மையை மறைப்பதற்கான ஏற்பாடு என்றும் கூறினார்.

இதற்காகவே இலங்கை அரசாங்கம் ஓடி ஓடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்த மன்னார் ஆயர் உண்மையின் அடிப்படையில் உண்மையின் நீதியின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மேலும் தெரிவித்தார். 

மக்களின் உரிமையை பாதுகாப்பும் பொறுப்போடு உருவாக்கப்பட்ட ஐ.நா தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான வரலாற்றின் இறுதியிலேயே எம்மீது கவனம் செலுத்தியது என்று குறிப்பிட்ட ஆயர் அதனை ஐ.நா உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஆயர் அவை உலக மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கையே என்றும் உலகப் பொது நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். 
« PREV
NEXT »