தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஒரு சிக்கலான நிலை தோன்றியுள்ளது. நாங்கள் நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே பெரும்பான்மை கட்சியுடன் சேர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம்.
ஆனால் பெரும்பான்மைக்கட்சிகளை இங்கே நாம் வளர்க்க முற்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் தொடர்ந்தும் கொலை ,கொள்ளை மற்றும் தமிழ் மக்களை 100 வீதம் புறக்கணிப்புக்குள் தள்ளிய ஒருவர் நாட்டின் தலைமையில் இருக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்திருந்தோம். இதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து போகப் போகின்றோம் என்று அர்தமில்லை.
டக்ளஸ் தேவானந்தாவை இன்றும் நாங்கள் அங்கீகரிப்பதாக இல்லை.. அவர் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுக்க முடியுமோ அவ்றறைக் கொடுத்து விட்டு தற்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார். தமிழர் தேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே நின்று நிலைக்க வேண்டும் என்பதில் அனைவரும் இம் முறை தேர்தலில் நிதானமாக இருக்க வேண்டும்.
ஐ.தே.கட்சியை நாம் வரவேற்கக் கூடாது. அவ்வாறு வரவேற்றால் தற்போது இழந்து கொண்டிருப்பவை அனைத்தும் முற்றாக இழக்கப்படும். எமக்குள் தமிழ் கட்சிகள் இருக்கட்டும்.ஆனால் பெரும்பான்மைக் கட்சிகளை இங்கே வளர்க்க முற்படக்கூடாது. மேலும் இன்று இங்கு அமைக்கப்பட்ட நூலகம் ஒரு அருமையான திட்டம். இதனை அமைத்த வலி. மேற்கு பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த கோரியிருந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு அமைச்சர் அதாவுல்லாவிடம் பேசினோம். மீண்டும் ஒருதடவை பேசுவோம்.
இந்த பிரதேச சபை - நகர சபை ஆக்கப்படும் என நான் நினைக்கின்றேன். அத்துடன் 100 நாள் திட்டத்தில் இதனையும் கொண்டு வரமுடிமா என்றும் பேசி தீர்மானிக்கலாம்.மேலும் பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு வாகனங்கள் சிலருக்கும் சிலருக்கு மூன்று வாகனங்களும் கொடுக்கின்றார்கள். இன்னனும் 231 வாகனமும் பிரதேச சபைகளுக்கு கொடுக்கப்படும் என அமைச்சர் கரு ஜெயசூரிய கூறியிருந்தார். அதற்கமைய அனைவருக்கும் கிடைக்கும் என நம்புகின்றோம் என்றார்.
Social Buttons