ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமைன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை முன்னெடுக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மீது முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த அரசாங்கம் செய்த அதே தவறினை இந்த அரசாங்கமும் மேற்கொண்டு வருவதாக முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு விசேட ஒழுங்கு விதிகளின் கீழ் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரங்களை முப்படையினருக்கும் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாட்டில் கருணையான ஆட்சிக்கு பதிலாக இராணுவ ஆட்சியே தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்யாத காரணத்தினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் எதிரிகள் மாற்றுச் சிந்தனையாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் தசாப்தங்களாக அவசரகாலச் சட்டத்தையே பயன்படுத்தி வந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2011ம் ஆண்டு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும் அதற்கு பதிலாகவே இந்த பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விசேட வர்தமானி அறிவித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காவல்துறையினரின் கடமைகளில் முப்படையினரை ஈடுபடுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையானது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டியேற்பட்டதாகவும், கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனை நீடித்திருந்தார் எனவும், இம்மாதம் 3ம் திகதி புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றில் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons