ஆட்சி மாற்றத்தின் ஒரு பகுதிதான் முடிவடைந்திருக்கிறது. ஜே.ஆர் உருவாக்கிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப்பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச அகற்றப்பட்டு, அவரின் சகாவான மைத்திரிபால சிறிசேன அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். தான் போட்டியிடும் அந்த பதவியையை ஒழிப்பேனென்று கூறி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மக்களைப் பொறுத்தவரை, பொது
எதிரணியினர் மகிந்த ஆட்சி மீது சுமத்திய ஊழல், நிர்வாகச் சீர்கேடு, குடும்ப
ஆட்சி என்கிற குற்றச்சாட்டுக்களை முழுமையாக நம்பிவிட்டார்கள். சீனச்
சாலைகளும், வானுயர்ந்த கோபுரங்களும், சிங்கப்பூரில் நிற்பது போன்றதொரு
பிரமையை உருவாக்கிய தாமரைத் தடாகங்களும், துறைமுகங்களும் மக்கள் மனங்களை
வெல்லமுடியாமல் போய்விட்டது.
பொது எதிரணியின் பரப்புரைகளை
முறியடிக்கும் வகையில் மகிந்தரின் குழு திட்டமிடவில்லை. இக்குழுவிலுள்ள பல
தலைகள், சரத் பொன்சேக்கா போட்டியிட்ட காலத்திலும் ஒன்றாக இருந்தார்கள்.
புலிகளைப் போரில் வென்ற பிரமாண்டமான தோற்றம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது
என்பதை உணர்ந்ததாலும், சோதிடர் சுமனதாச மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும்,
ஓராண்டிற்கு முன்பாகவே தேர்தலை நடாத்தும் முடிவினை எடுத்து, தான் வெட்டிய
குழிக்குள் தானே வீழ்ந்துவிட்டார் மகிந்தர்.
இனி ஆட்சி மாற்றத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகப் போகிறது. அதுதான் நாடாளுமன்றத் தேர்தல்.
முக்கியமான அரசியல் மாற்றங்களும், தேசிய இனமுரண்பாடு குறித்த பேச்சுக்களும் இத் தேர்தலின் பின்பே ஆரம்பமாகும் .
இவ்விரு பாகங்களுக்கு இடையில் நடைபெறும் நிகழ்வுகளையே ஊடகங்கள் தற்போது நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
இறுதி நேரத்தில் வேலி தாண்டிய ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்க, விசாரணைக்கைதியாக சிறைவாசம் அனுபவிக்கிறார். அனேகமாக 8 ஆண்டுச்
சிறை நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. கைவிலங்கு பூட்டப்பட்ட கைகளை
உயர்த்திப்பிடித்தபடி, மக்களுக்கு என்ன சொன்னார் என்று புரியவில்லை. சிறை
செல்பவர்கள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும் என்கிற வழமையான
நம்பிக்கையோடு காவல்துறை வாகனத்தில் அவர் ஏறினாரோ தெரியவில்லை.
அரசியல்வாதிகளிலிருந்து அரச உயர் அதிகாரிகள் வரை, புதிய ஆட்சியாளர்களின்
கிடுக்குப்பிடி தொடர்கின்றது. இதில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார
விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா அவர்கள், பெரிய
அதிகாரிகள் மீது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்துள்ள விவகாரம்
முக்கியமானது. நாட்டை விட்டு வெளியேறாதவாறு சிலரின் கடவுச் சீட்டுக்கள்
முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர்
அஜித் நிவாட் கப்ரால் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு அஜித்தின்
பரம வைரியாக இருந்த, முன்னாள் திறைசேரியின் செயலார் P.B.ஜெயசுந்தர மீதும்
ஹர்ஷா- ரவி கருணாநாயக்க கூட்டின் அக்னிப் பார்வை திரும்பியுள்ளதென
செய்திகள் கூறுகின்றன.
ரவி நிதியமைச்சராக இருந்தாலும்,
கலாநிதி.ஹர்ஷா மற்றும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன்
ஆகியோரின் பொருளாதார நிபுணத்துவம், மகிந்த ஆட்சியில் நிதித் துறையில்
ஏற்பட்ட தில்லு முல்லுகளை அம்பலப்படுத்தும் என்று நம்பலாம்.
அதுமட்டுமல்லாது, மகிந்தரின் ஆட்சியில் மத்திய வங்கி வெளியிட்ட
புள்ளிவிபரங்கள், மக்களை -வெளிநாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்களை ஏமாற்றும்
வகையில் பொய்யான தகவல்களை கொண்டிருந்தன என்பது குறித்த விசாரணை
மேற்கொள்ளப்படுகிறது.
மொத்த உள்ளூர் உற்பத்தியானது 7.5% வளர்ச்சியை
எட்டியுள்ளதாக முன்னைய அரசு தம்பட்டமடித்தாலும் ( அது 6.3% என்பதுதான்
உண்மை), வீட்டிற்குரிய வருமானத்தின் ( Household income )வளர்ச்சி 0.5%
மட்டுமே என்பதைக் கவனித்தல் வேண்டுமென்கிறார் கலாநிதி ஹர்ஷா சில்வா. ஆதலால்
அடிப்படையில், வீட்டிற்குரிய வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தமது
நிதிக்கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடல் அமையுமென கூறுகின்றார். இதனைப்
பல நேர்காணல்களில் அவர் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
ஆகவே,
புதிய அரசியல்- பொருளியல் நிபுணர்களின் பொதுவான பொருண்மியக் கொள்கை எவ்வாறு
அமையப்போகிறது என்பது குறித்து, அவர்கள் வெளியிடும் சில
ஒப்பீடுகளும்,மதிப்பீடுகளும் புலப்படுத்துகின்றன.
கடந்த நவம்பரில்
மகிந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறை 521
பில்லியன் ரூபாவாக இருந்தது. அதனை 494 பில்லியன் ரூபாவாகக் குறைத்து
எதிர்க்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டாராம் நிதியமைச்சர். அதாவது
மொத்த உள்ளூர் உற்பத்தியின் 4.6% மாக இருந்த பற்றாக்குறையை 4.4% மாகக்
குறைத்து விட்டார் என்று கூறுவதன் மூலம், 'இனியெல்லாம் வசந்தமே' என்று அரச
தரப்பு பாடத் தொடங்கிவிட்டது.
இவைதவிர, இலங்கை முதலீட்டுச் சபை
நிர்வாகத்தில் பல அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்
ஆரம்பித்துவிட்டன. இச் சபையின் தலைவராக பிரபல சட்டத்தரணி உபுல் ஜெயசூரிய
நியமிக்கப்பட்டுள்ளார். இது மேற்குலக முதலீட்டாளர்களுக்கு சாதகமாக
அமையுமென்று நம்பப்படுகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான
உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தேசாயின் முக்கியத்துவமிக்க
விஜயமும், அடுத்ததாக ஜோன் கேரி வருகை தரலாம் என்கிற செய்தியும் இதனை
உறுதிப்படுத்துகின்றன.
இதேவேளை ஆட்சி மாற்றத்தின் இரண்டாம் பாகம்
நிறைவேறும் முன்பாக, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு
வருகிறார். இதன் பின்னணியில் சந்தைப் பங்கீட்டில் அமெரிக்காவுடனான போட்டி
கட்டாயம் இருக்கும். ஏனெனில் வர்த்தக உபரி இந்தியாவிற்குச் சாதகமாக
இருந்தாலும், ஏனைய நாடுகளைவிட கூடுதலான வர்த்தகத்தை இந்தியாவே
மேற்கொள்கிறது. அதற்கு, இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ள பலமான சுதந்திர
வர்த்தக உடன்பாடும் (FTA)ஒரு முக்கிய காரணி.
Asian Clearing Union ஐ எடுத்துக்கொண்டால், அங்கும் இந்தியாவிடம் கடன்பட்ட நிலைதான் இலங்கைக்கு இருக்கிறது.
அடுத்ததாக, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பொதுக்கடன்
திணைக்களத்தின் ( Public Debt Department ) 2013 ஆம் ஆண்டிற்கான சில
முக்கிய புள்ளி விபரங்களைப் பார்ப்போம். போரின் பின்னர் சீனாவின் உபயத்தால்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 'அந்த மாதிரி' இருக்கின்றதென அஜித்தும்,
ஜெயசுந்தராவும் எதை வைத்துச் சொல்லியிருப்பார்கள் என்று மக்கள் பார்க்க
வேண்டும்.
அந்த ஆண்டில் நிலுவையிலுள்ள அரச கடன் 6793.2 பில்லியன்
ரூபாய். இதில் உள்நாட்டுக் கடன் 3832.8பில்லியன். வெளிநாட்டுக் கடன்
2960.4 பில்லியன் ரூபாய். இம் மொத்த தொகையானது உள்ளூர் மொத்த உற்பத்தியின் (
Gross Domestic Product )78.32% ஆகும். ஆனால் எம்மைவிட கிரேக்கத்தின்
மொத்த கடன் 2013 இல் GDP இன் 174.9% ஆக இருக்கிறதென பெருமைப்பட்டுக்
கொண்டார்கள் மகிந்த ஆட்சியாளர்கள். அதற்குள் யார் குறைவான கடன் வாங்கினார்
என்கிற போட்டி வேறு.
ஆனாலும் 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்கள் வரும்போதுதான், ரவி- ஹர்ஷா கூட்டின் பொருளியல் ஆளுமை புரியுமென்று நினைக்கின்றேன்.
இனிமேலாவது கிராமங்கள், நகரங்கள் தோறும் வெகுசன அமைப்புகளை உருவாக்கி,
ஹர்ஷா டி சில்வா செய்யப்போகும் ' வீட்டிற்குரிய வருமான உயர்வு' உண்மையில்
நடைபெறுகிறதா? என்பது குறித்து உரையாட வேண்டும். உலகச் சந்தையில் மசகு
எண்ணெயின் விலை இறங்கும் போது, இலங்கையில் எண்ணெய் விலை மாறாமல் இருக்கும்
தாற்பரியம் ஏன் என்று கேட்க வேண்டும். ஏனெனில் வாக்களித்தவுடன் மக்களின்
தேசியக்கடமை முடிந்து விடுவதில்லை.
ஆட்சி மாற்றத்தின் இரண்டாம்
பாகம் முடிவடைய முதல், தேசிய இனப் பிரச்சினை குறித்து சர்வதேசமும், உள்ளூர்
அரசியல்வாதிகளும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று நோக்க வேண்டும்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
நாடொன்றில், தமக்குச் சார்பான ஆட்சியொன்று அமைந்து விட்டதாகக் கருதி, பல
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாழ்த்து மழை பொழிகின்றன.
மைத்திரிக்கு
பிரச்சினை கொடுக்காமல், ஐ.நா.தீர்மானத்தை ஆறப்போடுமாறு அறிவுரை சொல்ல
ஆரம்பித்துள்ளார் முன்னாள் அனுசரணையாளர் எரிக் சொல்ஹெம். உள்நாட்டுப்
பொறிமுறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாரென, கொழும்பிற்கு நேரடியாக
வந்து உத்தரவாதம் கொடுத்துள்ளார் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்புச் செயலர்
கமலேஷ் சர்மா.
அமெரிக்கத் தீர்மானத்தை ஒத்திவைக்க, மங்கள
சமரவீராவின் கதை கேட்டு மறைமுகமாகச் செயற்படும் மேற்குலக நாடுகள், நில
ஆக்கிரமிப்பு, நீண்டகாலச் சிறைவாசம், குறித்து மைத்திரி அரசிற்கு ஏன்
அழுத்தம் கொடுக்கத் தயங்குகிறது?.
அமெரிக்க உதவி இராஜாங்கச்
செயலாளர் நிஷா பிஸ்வாலை நேரில் சந்தித்தபோது, 'தமிழர் பிரச்சினை குறித்து
புதிய அரசு அக்கறை கொள்ளவில்லை'என்கிற தமது ஆதங்கத்தினை முன்வைத்ததாக
கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்
கூறியுள்ளார்.
அதிபர் மைத்திரி சிரிசேனா அவர்கள் ( அவரை 'மாண்புமிகு'
என்று சொல்லக்கூடாதாம்) அமைத்த தேசிய நிறைவேற்றுக் குழுவில் (NEC )
கூட்டமைப்பின் தலைவரும் இருக்கின்றார். இம்முக்கிய விவகாரத்தை
திரு.சம்பந்தன் அவர்கள் அங்கு பேசவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
ஆகவே சர்வதேச அழுத்தம் இப்புதிய ஆட்சியாளருக்கும் தேவை என்கிற முடிவிற்கு வருவது சரியாகப்படுகிறது.
இறுதியாக, இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்போது நீக்கப்படும்?.
விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இந்த ஜனநாயக அரசு
(!) எப்போது விடுதலை செய்யும்?. எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின்
பெயர்களையாவது இவ்வரசு வெளியிடுமா?. சம்பூர் மக்களின்
மீள்குடியேற்றத்திற்கு, புதிய புனர்வாழ்வு அமைச்சர் திரு.சுவாமிநாதன் என்ன
செய்யப்போகிறார்?. நிலமிழந்த வலி.வடக்கு மக்களுக்கு என்ன பதில்
கூறப்போகிறது மைத்திரியின் 100நாள் அரசு?. இன்னமும் விடைதேடும் ஆயிரம்
கேள்விகள் மக்களிடம் உண்டு.
இதுகுறித்து எரிக் சொல்கேயமோ, கமலேஷ் சர்மாவோ பேச மாட்டார்கள்.
ஒடுக்கப்படும் மக்கள்தான் பேச வேண்டும். பேசுவார்கள்.
Social Buttons