உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில்ஆரம்பிக்கின்றது. நடப்பு உலகக்கிண்ண தொடரை இணைந்து நடத்தும் நாடுகள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவாகும்.
பிரெண்டன் மக்கலம் (அணித்தலைவர்), அன்டர்சன், டிரென்ட் போல்ட், கிரான்ட் எலியட், மார்டின் குப்டில்,லதாம், மிட்சேல் மெக்லெனாகன், நதன் மக்கலம், கைல் மில்ஸ், அடம் மில்னே, லூக் ரோன்சி (விக்கெட் காப்பாளர்), டிம் சவுதி, ரோஸ் டெய்லர், டானியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன் ஆகியோர் இம்முறை நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அஞ்சலோ மத்யூஸ் (அணித்தலைவர்), திரிமன்னே, திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்காரா (விக்கெட் காப்பாளர்), மஹேல ஜெயவர்த்தன, தினேஷ் சந்திமால் (காப்பாளர்), திமுத் கருணரத்ன, ஜீவன் மென்டிஸ், திசார பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, துஷ்மந்த சமீர, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சச்சித்ர சேனநாயக்க ஆகியோர் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்தும், இலங்கையும் இதுவரை 89 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து 41 போட்டிகளிலும், இலங்கை 40 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. ஏழு போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. 2003 உலகக்கிண்ண போட்டித் தொடரில் தொடக்கம் இதுவரை ஐந்து முறை இவ்விரு அணிகளும் உலகக்கிண்ண போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளிலுமே இலங்கைதான் வெற்றி பெற்றுள்ளது. 2003இல் ஒரு முறையும், 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் தலா இருமுறையும் நியூசிலாந்தை இலங்கை வீழ்த்தியுள்ளது. ஆனால் இம்முறை சொந்த ஊரில் ஆடுவது நியூசிலாந்து வீரர்களுக்கு பலமாகும்.
இறுதி கட்ட ஓவர்களில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம், 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஆதிக்கம் செலுத்துகிறது. 41 முதல் 50 ஓவர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில், நியூசிலாந்தின் சராசரி ஓட்ட விகிதம் 8.82 என்ற அளவில் உள்ளது. இதில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு. இந்தியாவின் சராசரி ஓட்ட விகிதம் 7.88 ஆகும். அவுஸ்திரேலியா 7.87 ஓட்ட விகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை 7.55 ஓட்ட விகிதத்துடன் 7ஆவது இடத்தில்தான் உள்ளது.
அத்துடன் சமீபத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துடனான தொடரை இலங்கை அணி இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons