நாட்டின் பல பகுதிகளிலும் விசேடபணியினை மேற்கொள்வதற்காக முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
திங்கட்கிழை வெளியாகியுள்ள விசேடவர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினரையும் தலைநகர் கொழும்பு, வடகிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டமொழுங்கை நிலைநாட்டுவதற்கு உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனேகமான அனைத்து மாவட்டங்களிலும் சட்டமொழுங்ககை நிலைநாட்டுவதற்கு பொலிஸாரிற்கு பதிலாக முப்படையினரையும் பயன்படுத்தும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் அமைந்துள்ளமை மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
அரசதரப்பிலிருந்து இதுவரை இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகததும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இது குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் கொழும்பின் முக்கிய தரப்புகளோடு தொடர்பு கொண்டதில் சில தகவல்களை பெற முடிந்தது.
1) இந்த அறிவித்தல் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போதும் அதற்கு முன்னைய பின்னைய சட்டம் ஒழுங்கைப் பேணும் நடவடிக்கைகளில் முப்படையினரையும் ஈடுபடுத்தல்.. இவ்வகையான செயற்பாடுகளை முன்னைய ஜனாதிபதிகளும் மேற்கொண்ட போதும் யாப்பிற்கு அமைவாக சட்ட ரீதியாக ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவை மேற்கொள்ளப்படவில்லை...
2) கோத்தாபய ராஜபக்ஸவுக்கு சார்பான இராணுவத்தின் பிரிவொன்று இன்னும் செயற்பாட்டு நிலையில் இருப்பதனால் இது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளதாக சொல்லப்படுகிறது, இந்தப் பிரிவினர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வடக்கில் ஏதாவது குழப்பத்தை உண்டுபண்ணலாம் என்ற அச்சம் காணப்படகின்ற நிலையில் இந்த முன் எச்சரிக்கை பிரகடணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...
இருப்பினும் இது குறித்து அரசாங்கத்தின் உத்தியோ பூர்வ அறிக்கை வெளியாகும் வரை இந்த வர்த்தமானி அறிவிப்பின் காரணங்களை உறுதியாக கூற முடியாது...
No comments
Post a Comment