Latest News

February 07, 2015

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்- கண்கெட்ட பிறகு சூரியவணக்கமா?
by admin - 0


EPDP
EPDP
வரவு - செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய முழுமையான உரை 

தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே,
புதிய அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மக்களின் வாழ்க்கைச் சுமையைப் பல வழிகளிலும் குறைப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றபடியால் நாங்கள் பிரதம அமைச்சர் அவர்களிடமும் ஜனாதிபதி அவர்களிடமும்  அவற்றுக்கு ஆதரவளிப்பதாகக்  குறிப்பிட்டிருக்கின்றோம்.

இருந்தபோதிலும், சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரையில் அது கொழும்பில் ஒரு விலைக்கும் வடக்கு, கிழக்கில் ஒரு விலைக்கும் விற்கப்படுகின்றது. அதாவது, போக்குவரத்துச் செலவைக் காரணங்காட்டி அந்த விலைக் குறைப்பிலிருந்து மீறிய வகையில் அது விற்பனை செய்யப்படுகின்றது.

அந்த வகையில், நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் அதைக் கவனத்திலெடுத்து நாடு தழுவிய ரீதியில் அந்த விலைகளைச் சமப்படுத்த வேண்டும். அதாவது விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் எல்லா இடங்களிலும் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆனபடியால் அதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நீண்டகால ஆட்சியிலே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற ஒரு கொள்கையை வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலில் எங்களுடைய பிரசாரத்தை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் எங்களுடைய அந்தக் கொள்கைகளுக்கு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் இந்தச் சபையில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேநேரத்தில் ஓர் ஆட்சி மாற்றம் தேவை என்ற வகையில் நாடு தழுவிய ரீதியில் வாக்களித்த மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த 100 நாள் வேலைத்திட்டத்துக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை விமர்சனத்தோடு முழுமையாக முன்வைப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் போருக்குப் பின் பல உட்கட்டமைப்பு வேலைகளைக் கடந்த அரசு செயற்படுத்தி வந்தது. அவை தற்சமயம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆனால், கடந்தகால அரசாங்கத்தின் அந்த உட்கட்டமைப்பு வேலைகளைத் தொடர வேண்டும் என்று இந்தப் புதிய அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டதால் அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் பின்னடைவு காணப்பட்டது. அதேபோல யுத்த அழிவுகளினாலும் அந்தப் பிரதேசத்தில் பின்னடைவுகள் காணப்பட்டபடியால் தென்னிலங்கையோடு சமப்படுத்துகின்ற வகையில் அங்கு அந்த உட்கட்டமைப்பு வேலைகள் உட்பட, அபிவிருத்தி வேலைகளுக்கு கூடிய முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நிதியமைச்சர் அவர்கள் தன்னுடைய உரையில், விசேடமாக வட மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்குப் பங்களிக்கின்ற வகையில் 5 வருட முதிர்வைக் கொண்ட  4.5 சதவீத நிலையான வட்டிக்கு  25,000 அமெரிக்க டொலர் பெறுமதியான குறைந்த முதலீட்டு எல்லைக்குக்கீழ் 'தேசிய அபிவிருத்திப் பிணைகள்' வழங்குவதாக முன்மொழிந்திருக்கின்றார். அதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேநேரத்தில் இந்த அரசு இரட்டைக் குடியுரிமை நடைமுறைகளைத் தளர்த்தியிருப்பதனையும்  வரவேற்கின்றோம்.

வடக்கு, கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது மக்களில் அனேகமானோர் யுத்தம் காரணமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருப்பதனால்  எங்களுடைய பகுதிகளில் சனத்தொகை விகிதாசாரம் குறைந்திருக்கின்றது. அதனால், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்குரிய சட்டமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்பொழுது  11இலிருந்து 07ஆகக் குறைந்திருக்கின்றது. அதனை ஈடுசெய்கின்ற வகையில், இங்கு பிறந்து வளர்ந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து இருக்கின்ற எமது மக்களுக்கும் வாக்குரிமை கொடுக்கக்கூடிய வகையில், சட்ட ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேசிய அபிவிருத்திப் பிணைகளை வழங்க முன்வருகின்ற அரசாங்கம், இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் இருந்த நடைமுறைகள் தளர்த்தப்படுவதனால், அதனுடன் சேர்த்து அந்த மக்களுக்கும் இங்கு வாக்களிக்கக்கூடிய நிலைமையைச் சட்டரீதியாக ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்து, பாதுகாப்புப் படையினரிடம் இருக்கின்ற நிலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட வேண்டும். எங்களுடைய கடந்த ஆட்சிக் காலத்தில்,  நாங்கள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிகமான நிலங்களை விடுவித்து மக்களிடம் கொடுத்துள்ளோம். மேலும் எஞ்சியுள்ள நிலங்களையும் இந்தப் புதிய அரசாங்கம் விடுவிக்கவேண்டும் என்று கேட்கின்ற அதேநேரத்தில், அவற்றை விடுவிக்கும் என்று நான் நம்புகின்றேன். ஏனென்றால்,  அந்த நிலம் மக்களுக்குச் சொந்தமானது என்பதனாலும் அவை விவசாயம் செய்யக்கூடிய வளமான நிலங்களாக இருக்கின்றபடியினாலும் நிச்சயமாக அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்கவேண்டும். அத்துடன், அங்கு பாதுகாப்புக்காக வைத்திருக்கின்ற படைத்தரப்பினருடைய எண்ணிக்கையையும் குறைக்கவேண்டும்.  அங்கு எத்தனையோ தரிசு நிலங்கள் இருக்கின்றன.  அவர்களுக்குத் தேவையென்றால், அந்த மாவட்டத்துக்குரிய முகாம்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில், அரச காணிகளில் முகாம்களை அமைக்கலாம் என்று நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். 

அதேபோல, சிறைகளில் வாடுகின்றவர்கள் பற்றியும் சொல்ல வேண்டும். இவர்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக பொதுமன்னிப்புக் கொடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதைவிட, எங்களுடைய கடல் வளங்களை அழிக்கக்கூடிய வகையில், எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தைச் சூறையாடக்கூடிய வகையில், மீண்டும் தென்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் எல்லைதாண்டி வந்து கடற்றொழில் புரிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனபடியினால், இந்த அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி, இரு தரப்பு கடற்றொழிலாளர்களையும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி, விரைவாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

எங்களுடைய கடந்த ஆட்சிக் காலத்தில் ஓமந்தைச் சோதனைச்சாவடி உட்பட நூற்றுக்கணக்கான சோதனைச் சாவடிகளை நாங்கள் அகற்றியிருக்கின்றோம். ஆனால், இன்று அதில் ஒரு குழப்பமான கருத்தொன்று நிலவுகின்றது. நான் பிரதமரைச் சந்தித்தபோது மீண்டுமொரு முறை இதுதொடர்பில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன். இந்த நாட்டிலுள்ள எல்லா இடங்களுக்கும் எவ்வாறு இலகுவாகவும் சுதந்திரமாகவும் சென்றுவரக்கூடிய நிலைமை இருக்கின்றதோ, அதேமாதிரி சுதந்திரமாக வடக்கிற்கும் சென்றுவரக்கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன்.

அதைவிட, இன்னுமொரு குழப்பமான செய்தி என்னவென்றால், முப்படைகளுக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கியிருப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த அறிவித்தலானது மக்களிடையே ஓர் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனபடியினால், இதுதொடர்பில் இந்தப் புதிய அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறான ஒரு தேவை இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் தொடர்ந்தும் அவ்வாறான அதிகாரங்கள் முப்படைகளுக்கு அவசியமில்லை என்று நான் கருதுகின்றேன். அந்த வகையில் நான் ஜனாதிபதி அவர்களிடமும் பிரதமர் அவர்களிடமும் இக்கோரிக்கையை இச்சபையினூடாக முன்வைக்கின்றேன்.

அடுத்து, தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய உரையிலே,  "போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போதுமான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை" என்று மனம்திறந்து குறிப்பிட்டார். அவருடைய உரையை ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதாவது, ஒரு கையை மாத்திரம் தட்டினால்  ஓசை வராது;  இரு கைகளும் தட்டினால்தான் ஓசை வரும்.  அந்த வகையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டும்.  குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தாங்கள் அரசாங்கத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லையென்றும்  அரசில் பங்கெடுக்கவில்லையென்றும் சொல்கிறார்கள்.  ஆனால், அப்படிச் சொன்னாலும் அவர்கள் இந்த அரசாங்கத்தின் நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கின்றார்கள்.  அதாவது அமைச்சரவையைவிட ஒரு மேலான சபையில் அவர்கள் அங்கம் வகிக்கின்றபடியினால் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் எங்கள் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.

கடந்த காலங்களில் ஆளுங்கட்சி ஒரு கொள்கையை முன்வைத்தால் எதிர்க்கட்சி அதை எதிர்க்கின்ற நிலைமைதான் இருந்தது.  ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை.  ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றபடியினால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு - அவை நாளாந்தப் பிரச்சினைகளாக இருக்கலாம் அல்லது அரசியல் உரிமைப் பிரச்சினைகளாக இருக்கலாம் - தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.    

கடந்த காலங்களில் நாங்கள் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக நீண்டகாலமாக முன்வைத்து வந்தது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தையாகும்.  அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கூடாகவோ அல்லது ஒரு சர்வகட்சிக் குழுவினூடாகவோ விசேட அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் ஆரம்பம் முதற்கொண்டு கூறிவந்திருக்கிறோம்.  இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை மீண்டும் வலியுறுத்திச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.  

அதேநேரத்தில் குறிப்பாக எரிபொருட்களினுடைய விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றபடியினால் அவற்றோடு சம்பந்தப்பட்ட சகலவற்றையும் ஒரு கட்டுப்பாட்டு விலைக்குக் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் கவனிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.  அத்துடன் விவசாயக் கடன்களில் 50 வீதம் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.  அதற்காக இந்த அரசுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்வதுடன், கடந்த காலங்களில் எங்களுடைய பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் எமது மக்களுக்குத் தேவையான விவசாய உள்ளீடுகளை இலவசமாகவோ அல்லது மானிய அடிப்படையிலோ வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கும்  எமது மக்கள் நலன் சார்பாக இந்த அரசு எடுக்கின்ற சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம் என்று தெரிவித்து, இந்தச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.  

பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் இராணுவத்துக்கு வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் அச்சத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் விளக்கமளிக்க வேண்டும்; பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்


பொலிஸாருக்கு உரிய அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சமும் அதேநேரம் சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு நாம் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

புதிய அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்திருப்பதையிட்டு வரவேற்கின்றோம். எனினும் எரிபொருள் விலையானது கொழும்பில் ஒரு விலையிலும் வடக்கில் மற்றொரு விலையிலும் விநியோகிக்கப்படுகின்றது. எனவே இவ்விடயத்தில் நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் எரிபொருள் விலை குறைப்பானது நாட்டின் அனைத்து மக்களும் அனுபவிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

இதேவேளை இரட்டைக் குடியுரிமையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விளைந்திருப்பது தொடர்பில் நாம் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைமாறி தற்பொழுது 7ஆக குறைந்துள்ளது. அங்கிருந்த மக்கள் புலம்பெயர்ந்ததன் காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே புலம்பெயர் சமூகத்தினருக்கும் வாக்குரிமை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்தோர் இங்கு வாக்களிப்பதை சட்டரீதியில் ஏற்படுத்துவதற்கு வகை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் வடக்கில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள நிலங்களை மீட்டு மீண்டும் மக்களிடத்தில் கொடுப்பதற்கும் அரசியல் கைதிகளாக இருப்போரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்ற அதேவேளை எமது கடல் வளம் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு செயற்படுமாறு புதிய அரசாங்கத்தை கேட்கின்றோம்.

இதேவேளை பொலிஸாருக்கு உரிய அதிகாரத்தை இராணுவத்துக்கும் வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ் மக்களிடத்தில் பாரிய அச்சமும் சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப் பட்டுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


« PREV
NEXT »