Latest News

February 28, 2015

ஐ.எஸ். படுகொலை வீடியோ காட்சிகளில் தோன்றிய 'ஜிஹாதி ஜோன்' லண்டன் தகவல் தொழில்நுட்பவியலாளர்
by admin - 0

JIHADI JONH
ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்குலக பணயக்கைதிகள் படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளில் முகமூடியணிந்து கத்தியுடன் தோன்றும் தீவிரவாதி குவைத்தை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானியரான மொஹமட் எம்வாஸி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டு குவைத்தில் பிறந்த மொஹமட் எம்வாஸி, 1994 ஆம் ஆண்டு தனது 6 ஆவது வயதில் பிரித்தானியாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடியேறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கணினி பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.
'ஜிஹாதி ஜோன்' என அழைக்கப்படும் மொஹமட் எம்வாஸி, மேற்கு லண்டனிலுள்ள இங்கிலாந்து சென் மேரி மடலின் தேவாலய பாடசாலையில் கற்கும் போது சக மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் வெளியிட்டுள்ளது.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததை தொடர்ந்து அவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தான்சானியாவுக்கு பயணத்தை மேற்கொண்டதையடுத்தே அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.
அவரும் அவரது இரு நண்பர்களும் வேட்டையொன்றுக்கு செல்லவே இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மூவரும் தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் தரையிறங்கியதும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் இரவைக் கழிக்க நேர்ந்தது.
தொடர்ந்து மொஹமட் எம்வாஸி நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகருக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவரை சந்தித்த பிரித்தானிய புலனாய்வு முகவர்கள், அவர் அல் – ஷபாப் போராளிகள் செயற்படும் சோமாலியாவுக்கு பயணம் செய்ய முயற்சித்ததாக குற்றஞ் சாட்டியுள்ளனர்.
அந்த குற்றச்சாட்டுக்களுக்கு மொஹமட் எம்வாஸி மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பிரித்தானியாவுக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் குவைத்தில் குடியேறிய மொஹமட் எம்வாஸி, அங்கு கணினி கம்பனியொன்றில் பணியாற்றினார்.
தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு லண்டனுக்கு அவர் விஜயம் செய்த போது, அவர் பிரித்தானிய தீவிரவாத முறியடிப்பு உத்தியோகத்தர்களால் தடுத்து வைக்கப்பட்டார்.
அவருக்கு குவைத்திற்கு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2010 ஜூன் மாதம் மொஹமட் எம்வாஸியால் லண்டனை அடிப்படையாக கொண்டு செயற்படும் கேஜ் என்ற பிரசார குழுவுக்கு அனுப்பப்பட்ட இலத்திரன் அஞ்சலில், ''நான் ஒரு தொழிலைப் பெற்று திருமணம் செய்வதற்கு தயாராக இருந்தேன். ஆனால் இப்போது கூண்டில் இருப்பதை மட்டுமல்ல லண்டனில் இருப்பதையே நான் சிறைக்கைதியொருவர் போன்று இருப்பதாக உணர்கிறேன். சிறை வைக்கப்பட்டு பாதுகாப்பு சேவையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நபர் என்ற வகையில் எனது பிறப்பிடமான குவைத்தில் எனது புதிய வாழ்க்கையை வாழ்வதிலிருந்து நான் தடுக்கப்பட்டுள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானிய தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் இடம்பிடித்திருந்த மொஹமட் எம்வாஸி, 2012 ஆம் ஆண்டு சிரியாவுக்கு ஒருவாறாக தப்பிச் சென்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் பெயரை மாற்றி குவைத்திற்கு பயணிக்க முயற்சித்த அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் தமது மகனைக் காணவில்லை என முறைப்பாடு செய்த அவரது பெற்றோருக்கு அவர் சிரியாவுக்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸாரால் 4 மாதம் கழித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் போலி படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியில் முதன்முதலாக தோன்றிய மொஹமட் எம்வாஸி, பின்னர் அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீபன் ஸொட்லொப், பிரித்தானிய தொண்டு ஸ்தாபன பணியாளர் டேவிட் ஹெயின்ஸ், பிரித்தானிய வாடகைக் கார் சாரதி அலென் ஹென்னிங், அமெரிக்க தொண்டு ஸ்தாபன பணியாளர் அப்துல் ரஹ்மான் காஸிக் ஆகியோர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்படும் வீடியோ காட்சிகளில் தோன்றியிருந்தார்.
அதன் பின் இந்த மாத ஆரம்பத்தில் ஜப்பானிய ஊடகவியலாளரான கென்ஜி கோடோ படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியில் அவர் தோன்றியிருந்தார்.
மொஹமட் எம்வாஸி தொடர்பில் லண்டனில் அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர் ஒருவருக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்ட கடுமையாக உழைக்கும் ஒருவராக அவர் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் அவரது பாடசாலை நண்பர்கள் கூறுகையில், அவர் உதைபந்தாட்டம் மற்றும் இஸ்லாம் என்பவற்றின் மீது பற்றுக்கொண்ட அமைதியான மாணவன் என தெரிவித்துள்ளனர்
« PREV
NEXT »