Latest News

January 12, 2015

அரசுடன் உடனடியாக இணையும் எண்ணம் இல்லை - கூட்டமைப்பு
by Unknown - 0


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசியலில் இணைந்து கொள்ளாது . எனினும் புதிய அரசு எவ்வாறான பாதையில் பயணிக்கின்றது என்பதை நன்கு அறிந்த பின்னரே அது குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில்  சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது தேசிய அரசியலில் கூட்டமைப்பினரை இணைந்து கொள்ளுமாறு மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.அதற்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் தேசிய அரசில் இணையுமாறு  ஜனாதிபதி கோரியிருந்தார். எனினும் நாம் தேசிய அரசுடன் இணையவோ, அமைச்சுப்பதவியையோ பெற மாட்டோம். ஆனால் இந்த அரசு பயணிக்கும் விடயங்களைக் கொண்டே இணைவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும்.

இன்றைய சந்திப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசு ஆக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். என்றும்  கோரிக்கை விடுத்தோம். வடக்கு .கிழக்கில் இராணுவ அதிகரிப்பு , மீள்குடியேற்றம் குறித்தும்  பேச்சுக்களை நடாத்தியுள்ளதுடன் மக்களது நிலைப்பாடுகளையும் எடுத்துக் கூறியுள்ளோம். எனினும் தமிழ் , முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைவரும் தமது சொந்த இடங்களில்  மீள்குடியேற்றப்படுவதை கொள்கை ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும்  எம்மிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியதுடன்  கடந்தகால வரலாறுகளையும் புதிய ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் பிரதிநிதிகளாகவும் இருந்து தமிழ் மக்களுக்கும் நாட்டிற்கும் விரோதமாக செயற்பட்ட வடக்கு .கிழக்கில் உள்ளவர்களை புதிய அரசில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நாம் அவரிடம் வலியுறுத்தினோம்.

வடக்கு .கிழக்கில் சிவில்  ஆளுநரை நியமிக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம். எனினும் அவர் வடக்கு கிழக்கு மட்டுமன்றி ஏனைய மாகாணங்களிலும் ஆளுநர் மற்றும்  மாவட்ட அரச அதிபர்களையும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இன்றைய எமது கன்னிப்பேச்சில் தமிழ் மக்களுடைய தீர்வினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதியும் ஒத்துழைப்பு வழங்குவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளதுடன் இருதரப்பிலும்  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றினையும் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »