இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 27 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும், 8 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சேனல், என்டிடிவிக்கு, ரணில் விக்ரமசிங்கே சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ரனில் கூறியுள்ள சில முக்கிய விஷயங்கள்: முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
ராஜபக்சே அதிபராக இருந்த காலகட்டத்தில், சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டார். ராஜபக்சே காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறு ஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக, ஐ.நா நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை ராஜபக்சே அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவந்தார்.
இனிமேல் அது நடக்காது. கொள்கைரீதியாக, தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அதிபர் பதவியை இழந்த ராஜபக்சேவிடமிருந்து சுதந்திர கட்சியின் தலைவர் பதவியும் பறிபோயுள்ளது. இந்நிலையில், போர்க்குற்ற வழக்குகள் மூலம் அவருக்கு நெருக்கடி அளிக்க புதிய அரசு திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
Social Buttons