Latest News

January 07, 2015

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு- நீதிபதியின் சரமாரி கேள்விகளால் திணறிய அரசு வக்கீல் பவானிசிங்
by admin - 0

 சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் அரசு வழக்கறிஞர் பவான்சிங் மவுனம் காத்தும் திணறிக் கொண்டும் இருந்தார். 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா சிறிது காலம் ஆஜராகி வாதடினார். ஆனால் தமக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ராஜினாமா செய்ய நேரிட்டது என்று பகிரங்கமாகவே அவர் அறிவித்தார். ஆச்சார்யாவைத் தொடர்ந்து பவானிசிங் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகினார். பவானிசிங் பெயரளவில் அரசு வழக்கறிஞராக இருந்தாலும் முற்று முழுவதுமாக ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே செயல்பட்டார். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த குன்ஹா கடும் அதிருப்தியை பல முறை வெளிப்படுத்தியிருந்தார். சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி கட்ட வாதத்தை தொடங்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா உத்தரவிட்ட பின்னரும் கூட பவானிசிங், தமக்கு உடல்நிலை சரியில்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி வாதத்தைத் தொடராமல் இருந்தார். இதனால் நீதிபதி குன்ஹா, பவானிசிங்குக்கு ரூ1 லட்சம் வரை அபராதம் போட்டார். 

இந்த வழக்கை இழுத்தடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதனையும் எதிர்க்காமல் குற்றவாளிகளான ஜெயலலிதா தரப்புக்கு பவான்சிங் ஒத்துழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இதனாலேயே அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து பவானிசிங்கை கர்நாடகா அரசு நீக்கியது. ஆனால் ஜெயலலிதா தரப்போ, எங்களுக்கு எதிராக வாதாட பவானிசிங்தான் வேண்டும் என்று வாதிட்டது. 

இதேபோல் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் எந்த ஒரு ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால்தான் தற்போதும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீடிக்கக் கூடாது என்று நேற்றைய முதல் நாள் விசாரணையின் போதே தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன் கோரியிருந்தார். 
இதனைத் தொடர்ந்து முறையான மனுவைத் தாக்கல் செய்ய் நீதிபதி பவானிசிங் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஏற்று பவானிசிங்கை நீக்கக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் ரிட் மனு ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார். திணறிய மவுனம் காத்த பவானிசிங் இந்த நிலையில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று 2வது நாளாக நடைபெற்றது. 

இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், ஜெயலலிதா செய்த செலவுகள் அனைத்தும் காசோலை மூலமாகவே நடந்ததாகவும், பிறந்த நாளுக்கு ரூ8 லட்சத்துக்கு வாங்கிய இனிப்பு வகைகளுக்கும் காசோலைகள் தான் வழங்கப்பட்டன; சுதாகரன் திருமண செலவுகள் அனைத்தையும் சிவாஜி குடும்பத்தினர்தான் செய்தனர்; காசோலை மூலமாகவே பரிவர்த்தனை நடந்ததை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கவனத்தில் கொள்ளவில்லை என்றார். 

அப்போது அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் நீதிபதி குமாரசாமி விளக்கம் கேட்டார். ஆனால் பவானிசிங்கோ, தேவையில்லாதவற்றை இந்த வழக்கில் நீக்கிவிடலாம் என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்ல நீதிபதி கடும் அதிருப்தி அடைந்தார். 

இதேபோல் 1991ஆம் ஆண்டுக்கு முன்பாக ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, வருமானத்தை கணக்கில் கொண்டீர்களா? ஜெயலலிதாவுக்கு அப்போது எவ்வளவு வருமானம் வந்தது என்றும் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த கேள்விக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் பவானிசிங் அமைதியாக நின்று கொண்டிருந்தால் நீதிபதி குமாரசாமி கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


« PREV
NEXT »

No comments