Latest News

January 04, 2015

அடித்தே இளைஞன் கொலை விபத்து அல்ல-யாழில் சம்பவம்
by admin - 0

யாழ்.வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி தெரிவித்தார்.

கடந்த 31 ஆம் திகதி இரவு யாழ். வைத்தீஸ்வரா சந்திப் பகுதியில் ஆட்டோ விபத்தில் ஓட்டுமடம் அராலி வீதியைச் சேர்ந்த புவனேந்திரராஜா ஜீவசாந்தன்; (வயது 23) என்பவர் உயிரிழந்திருந்தார்.
இவ்இளைஞன் முச்சக்கர வண்டி விபத்தினாலேயே உயிரிழந்தார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

சம்பவ தினமன்று பிரஸ்தாப இளைஞன் குறித்த பகுதியிலுள்ள கடைக்கு வீதியால் நடந்து சென்றுள்ளார்.

இதன்போது ஆட்டோ ஒன்று வேகமாக வந்ததாகவும், பின்னர் அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாகவும் இதன்பின் அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் குற்றுயிராக வீழ்ந்து கிடந்ததாகவும் கூறப்பட்டது.

பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த இளைஞன் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சுயநினைவற்ற நிலையிலேயே குறித்த இளைஞன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் பிடரிப்பகுதியில் பெரியகாயம் காணப்பட்டதாகவும், அக்காயம் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டதனை போன்றுள்ளது.
மூளைப் பகுதியில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, சுயநினைவினை இழக்கும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ் உயிரிழப்பானது விபத்தால் ஏற்பட்டதல்ல என்பதால் யாழ்.பொலிஸ் நிலைய குற்றவியல் பொலிஸாருக்கு இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.    
« PREV
NEXT »

No comments