பாரீஸ் நகரில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் புகுந்து, நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் தொடர்புள்ள 18 வயதான இளம் தீவிரவாதி ஹமித் மொராத் (18) நேற்று அங்குள்ள சார்லிவில்லி மெஜியரஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் பாரீசில் பிறந்த சகோதரர்களான செய்யது, செரீப் என தெரிய வந்துள்ளது. அவர்களது புகைப்படங்களை பாரீஸ் நகர போலீசார் வெளியிட்டு, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்களோடு தொடர்பில் இருந்த 7 பேரை நேற்று அவர்கள் கைது செய்தனர். இந்நிலையில் பாரீஸ் நகரில் நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததால், பதற்றம் நிலவியது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து வடகிழக்கு பாரிஸில் போலீசார் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடிய நிலையில் தீவிரவாதிகள் கடத்திய காரை அடையாளம் கண்டு போலீசார் பின்தொடர்ந்தனர். கார் தலைநகர் பாரிசை நோக்கி வந்தது. அப்போது போலீசார் தங்களை துரத்துகின்றனர் என்று தெரிந்துக் கொண்ட தீவிரவாதிகள் காரை வேகமாக ஓட்டிய வண்ணம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சாலையொர கடைகளிலும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகினார் என்றும் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் மேலும் பிரான்சில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நோக்கி செல்லும் தீவிரவாதிகளை போலீசார் விரட்டி வருகின்றனர். பிரான்ஸ் நெடுஞ்சாலையில் மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment