Latest News

January 27, 2015

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்
by Unknown - 0

சுமார் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் குணசித்திர நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார். அவருக்கு வயது 90. ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற வி.எஸ்.ராகவன், கடந்த 1954ஆம் ஆண்டு வைரமல்லி என்ற படத்தின் மூலம் திரைப்பட நடிகராக மாறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த ராகவன், பின்னர் சிறுவயதில் சென்னை மைலாப்பூருக்கு வந்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்த ராகவனுக்கு 1942ஆம் ஆண்டு ‘மாலதி’ என்ற பத்திரிகையில் சப் எடிட்டர் என்ற வேலை கிடைத்தது. அங்கு கிடைத்த சில நண்பர்களின் தொடர்பு காரணமாக அவர் மேடை நாடக நடிகராக மாறினார்.

இவருடைய திறமையை பார்த்து மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவருக்கு தன் படங்களில் அதிக வாய்ப்புகளை கொடுத்தார். மேலும் சிவாஜி, எம்.ஜி.ஆர்.ரஜினி, கமல் உள்பட பழம்பெரும் நடிகர்கள் முதல் தற்போதைய இளையதலைமுறை நடிகர்கள் வரை சுமார் 1000 படங்களுக்கும் மேல் தனது முத்திரையை பதித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கிய அண்ணி’ சீரியல் உள்பட வள்ளி, பைரவி, ரேகா ஐ.பி.எஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.

வி.எஸ்.ராகவன் நடித்து கடைசியான வெளியான திரைப்படம் ‘ஒரு கன்னியும் மூணு களவாணியும்’ என்ற திரைப்படம் ஆகும்.

சென்னையில் தனது குடும்பத்தினர்களுடன் வசித்து வந்த வி.எஸ்.ராகவன் உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார்.



மறைந்த வி.எஸ்.ராகவனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது. இவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலகின் முக்கிய புள்ளிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வி.எஸ்.ராகவன் மறைவிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »