Latest News

January 04, 2015

தேர்தலும் நாமும்.....
by Unknown - 0


இலங்கையில் சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் நிலை கவலைக்கிடமானதே. எம்மை  பொறுத்தவரையில் எந்த சிங்கள இனவாதிகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் எமது நிலையில் மாற்றம் ஏற்ப்படுவதென்பது கேள்விக்குறியனதே.இனவாதிகளால் நில ஆக்கிரமிப்பும் ,சமய  பௌத்தவிகாரை தோற்றமும் தினமும் நடந்துகொண்டேயிருக்கின்றது.

திடீரென முளைத்த வீதிகளும், யாழ் நோக்கிய புகையிரத பாதைகளும் எமது நிரந்தர விடுதலையை தந்துவிடமாட்டாது. வெளிநிலையில் மேடைகளில் கொச்சைத்தமிழ் பேசி எங்கள் மீது பாசம் காட்டுவதாக போலி நாடகத்தை ஆடி எமது இனத்தை மறைமுகமாக அழித்துவரும் இனவாதக் கும்பலுக்கு எமது வாக்குகளை அளிப்பது எவ்வளவுக்கு நியாயமானது ?

இம்முறை தேர்தல் மிகவும் சூடு பிடித்த நிலையில் யார் வருவார்கள் என நாடி பிடித்து பார்க்கும் நிலையில் சிறுபான்மை இனத்தின் வாக்குகளை நாட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

வெளிநிலையில் மேடைகளில் கொச்சைத்தமிழ் பேசி எங்கள் மீது பாசம் காட்டுவதாக போலி நாடகத்தை ஆடி எமது இனத்தை மறைமுகமாக அழித்துவரும் இனவாதக் கும்பலுக்கு எமது வாக்குகளை அளிப்பது எவ்வளவுக்கு நியாயமானது ?




சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் இருந்து தமிழர்களை இன்னும் சின்னம்   சிறுபான்மையினர் ஆக்கி பல பாரிய பரம்பரை விழுதுகளை முளையிலேயே கிள்ளி எறிந்து, தமிழ் இனத்தை திவிரவாதிகள் என்று சித்தரித்து தாம் செய்த மனிதப் படுகொலைகளிற்கு காரணம் கற்பித்து விட்டு, தற்போது கட்டி அணைத்து சந்தர்ப்ப சகோதர உறவு கொள்ளும் குடும்ப அரசியலிற்கு ஆதரவளிப்பதால் ஆகும் இலாபம் தான் என்ன ?

ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு தருணங்களில் தமது உடமைகளை முற்றாக இழந்து, உறவுகளை இழந்து, தக்க கல்வியையும் இழந்து எங்கோ தூர தேசத்தில் இன்னமும்   கால் கடுக்க 5 க்கும் 10  க்கும் உழைக்கும் எங்கள் உற்றவர்க்கான விடிவை யாரால் வழங்க முடியும்?

தருணத்திற்கேற்ப தப்பிப் பிழைக்கும் பச்சோந்தி போல் எம்மை முற்றாக  அழிக்கும் வேளையில் பெரும்பான்மை என்ற ஒரே கொடியின் கீழ் நின்று விட்டு தமக்கென்று வரும்போது மட்டும் சிறுபான்மை வாதம் பேசும் எதிரணியினரிடம் எதைக்கொண்டு நம்பிக்கை வைப்பது . தமிழர் பிரச்சினைகளிற்கான எந்த உறுதியான முடிவையும் பிரச்சாரம் செய்யாமல் இருக்கும் எதிரணிக்கு வாக்களிப்பது என்பது நெருப்பு சட்டிக்கு பயந்து நெருப்பில் குதித்த கதையாகிவிடப்போகின்றது .




சந்திரிக்கா ஆகட்டும் மைத்திரி ஆகட்டும் எம் இனப்பேரழிப்பின் போது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி குளிர்  காய்ந்து விட்டு தற்போது மயிலிறகால் புண்ணிற்கு மருந்திடுகிறோம் என்றால் அதையும் நாம் நம்புவதா?




ஆட்சி மாற்றம் என்பது இக் கால கட்டத்தில் கட்டாயம் ஆகின்றது . ஒன்று மாறும் போது பெறப்படும் மற்றொன்றாவது கரை ஏறுவதற்கான வழியைக்காட்டாதா என்ற அங்கலாய்ப்புதான் இன்று பலபேர் மத்தியில் மிஞ்சி கிடக்கின்றது. இதன் பிரதிபலிப்புத்தான் தேர்தலிற்கு முந்திய பல்வேறு கருத்துக்கணிப்புகளினூடே நிதர்சனமாக தெரிகின்றது.இவ்வாறு எதிர்  பார்ப்பதும் பின்பு அது பொய் ஆவதும் எமக்கு பழக்கப்பட்டதொன்றாகி விட்டது.


ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை போல் வேறு வழியின்றி ஒருவழி மட்டுமே கண்ணிற்க்கு புலப்படும்போது அதைப்பற்றிக்கொள்ளும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவை என்னவென்று விமர்சிப்பது!




தமிழர்களாகிய எமக்கு இன்று தேவைப்படுவது அபிவிருத்தி அல்ல சுதந்திரமான வாழ்வு. அதை எவராலும் தந்துவிடமுடியாது என்பது நாம் இத்தனைகாலமும் கண்கூடாக கண்டுவந்த உண்மை. இருப்பினும் யாராவதொருவர் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்ற நிலைக்கு பங்களிப்பது என்பது எமது உரிமையாகின்றது. தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்கிறார்கள் சிலர். ஏதாவது ஒன்றாவது புதிதாக வந்தால்  பரவாயில்லை என்கிறார்கள் பலர்.

எமக்கு அறிவுறுத்தக்கூடிய தலைமை என்று ஒன்று இருந்தது. இன்று அதுவும் மறைபொருளாய் உள்ளது. அவரவர் வாக்குரிமை அவரவர் கைகளிலேயே தரப்பட்டுள்ளது. அதை யாருக்கு தருவது என்பதும், எமது சந்ததியின் தலைவிதியை நிர்மாணிப்பதும் ஒவ்வொரு தனிமனிதனது கரங்களிலும் வாக்குச்சீட்டாக காத்திருக்கின்றது. வாக்குசீட்டை வாக்களிக்கமட்டுமல்ல எமது விருப்பை தெரிவிக்கவும் பயன்படுத்தலாம்.

இறந்தவர் வாக்களிப்பதும், இல்லாதவர் வாக்களிப்பதும், இயந்திரம் வாக்களிப்பதும் யாமொன்றும் அறிகிலோம் பராபரமே!

ராஜ் முல்லை 
rajtamilmullai@gmail.com


« PREV
NEXT »