எயார் ஏசியா கியூ.இஸட். 8501 விமானம் கடந்த மாதம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாவதற்கு முன்னர், அந்த விமானத்திலிருந்த எச்சரிக்கை மணிகள் ஒலித்ததாக மேற்படி விமான விபத்து தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விமானிகள் விமானத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அந்த விமானத்தின் இயக்கம் ஸ்தம்பிதமடைவதை குறிக்கும் எச்சரிக்கை ஒலி உட்பட பல எச்சரிக்கை ஒலிகள் அந்த விமானத்தின் விமானியினது அறையிலிருந்த கறுப்புப் பெட்டி ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.
இந்த எச்சரிக்கை ஒலிகளின் இரைச்சல் காரணமாக விமானிகள் இறுதியாக என்ன உரையாடினார்கள் என்பதை அறிய முடியாதுள்ளதாக இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையை சேர்ந்த அந்த விசாரணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விமானமானது கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்தோனேசிய சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் பயணித்த வேளை விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் மூழ்கியது.
இதுவரை அந்த விமானத்தில் பயணித்த 53 பேரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
ஏனையவர்களது சடலங்கள் கடலின் கீழ் மூழ்கியுள்ள அந்த விமானத்தின் பிரதான பாகத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.எனினும் கடுமையான நீரோட்டம் காரணமாக மேற்படி பாகத்தை நீர்மூழ்கி வீரர்கள் நெருங்க சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த விமானம் ஸ்தம்பிதமடைவதற்கு முன்னர் நிமிடத்துக்கு 6000 அடி உயரத்தில் மேலெழுந்துள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் இக்னாஸியஸ் ஜொனான் தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு விமானமும் இவ்வாறு விரைவாக மேலெழுவதற்கு முயற்சித்ததில்லை என அவர் கூறினார்.
Social Buttons