Latest News

December 15, 2014

தடுப்பு முகாமிலிருந்து திரும்பியவருக்கு சுயநினைவு இல்லை
by admin - 0

ஹம்பாந்தோட்டை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பிணையில் விடுவிக்கப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த 53 வயது நபர், சுயநினைவு இழந்துள்ளார் எனவும் அவருக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவரது உறவினர்கள் - 
தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (12) அவரை வீட்டுக்கு அழைத்துவந்த நிலையில், இதுவரை அவர் யாருடனும் கதைக்கவில்லை என்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டவரைப் போன்று அவர் அமைதியான உள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் மத்தி,தேவாலய வீதியைச் சேர்ந்த கே.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார். இவர், கடந்த கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, 1990ஆம் ஆண்டில் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றை அடுத்து காணாமல்போனார்.

இதன் பிறகு இவரது பெற்றோர், இவரை பல இடங்களில் தேடியும் வைரவநாதன் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. காலப்போக்கில் இவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரவநாதன் உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்கள் நினைத்து இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் அவர் இருப்பதாக ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடந்த நவம்பர் 11ஆம் திகதி, கடிதமொன்று அனுப்பப்பட்டது.

கடிதத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை சென்ற உறவினர்கள், அவரை பிணையில் விடுவித்து  சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். இருப்பினும், அவருடன் கதைத்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும், அவருக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments