Latest News

December 26, 2014

கோவையில் லிங்கா படத்தைப் பார்த்தபடியே உயிரை விட்ட ரஜினி ரசிகர்
by Unknown - 0


கோவை அருகே சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று லிங்கா படம் பார்த்த ரஜினி ரசிகர், தியேட்டரிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 56). சிறுநீரக பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரனுக்கு, டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த லிங்கா படம் ரிலீசானது. தீவிர ரஜினி ரசிகரான ராஜேந்திரன் எப்படியும் லிங்கா படத்தைப் பார்த்து விட வேண்டும் என துடித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை வெளியில் அனுமதிக்க மறுத்து விட்டது.

இதனால், மருத்துவர்களுக்குத் தெரியாமல் லிங்கா படத்தை ரகசியமாகச் சென்று பார்ப்பது என முடிவெடுத்தார் ராஜேந்திரன். அதன்படி, நேற்றிரவு கையில் குத்தப்பட்டிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார் ராஜேந்திரன். அங்கிருந்து எஸ்.பி.ஐ. ரோட்டில் உள்ள லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு சென்று, 10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்துள்ளார். 

பின்னர் உள்ளே சென்று லிங்கா படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். படம் முடிவடைந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட ராஜேந்திரன் மட்டும் சீட்டிலேயே அமர்ந்திருந்தது தியேட்டர் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அருகில் சென்று சோதித்துப் பார்த்த போது ராஜேந்திரன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஜினி படத்தைப் பார்த்தபடியே ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »