Latest News

November 18, 2014

திருடன் போலீஸ் விமர்சனம்
by admin - 0

நடிப்பு: தினேஷ், ஐஸ்வர்யா, பால சரவணன், ராஜேஷ் 

இசை: யுவன் சங்கர் ராஜா 

இயக்கம்: கார்த்திக் ராஜூ 

எந்த மாதிரியும் இல்லாத ஒரு புதிய வகை சினிமாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் திருடன் போலீஸ் மூலம் இயக்குநர் கார்த்திக் ராஜூ. நிச்சயம் கவனிக்க வைக்கும் முயற்சி. பொறுப்பான போலீஸ்காரர் ராஜேஷுக்கு பொறுப்பற்ற, அப்பாவை மதிக்காத பிள்ளை தினேஷ். தினேஷுக்கும் அதே காலனியில் வசிக்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் மகன் நிதின் சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு. இந்தத் தகராறு ஒரு கட்டத்தில் முற்றிப் போக, பெற்றோர்கள் முட்டிக் கொள்கிறார்கள். இதில் ராஜேஷைப் போட்டுத் தள்ள முடிவெடுக்கும் அசிஸ்டென்ட் கமிஷனர், அதற்கு ஒரு என்கவுன்டர் திட்டம் தீட்டி, அதில் ராஜேஷை சிக்க வைக்கிறார். திட்டப்படி ராஜேஷ் கொல்லப்படுகிறார். தந்தையை இழந்த சோகம் கிஞ்சித்தும் இல்லாத தினேஷுக்கு, தந்தையின் வேலை கிடைக்கிறது. 

அப்போதுதான் அந்த வேலையின் கஷ்டம், தன் தந்தையின் அருமையெல்லாம் புரிகிறது தினேஷுக்கு. ஆனால் அசிஸ்டன்ட் கமிஷனருக்கோ இது எரிச்சலைக் கிளப்புகிறது. அவனை வேலையிலிருந்து விரட்ட ஏகப்பட்ட டார்ச்சர் கொடுக்கிறார். ஆனாலும் கமிஷனர் நரேன் ஆதரவுடன், தன் தந்தையைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க முயல்கிறான் நாயகன். முயற்சியில் வென்றானா என்பது மீதி. சீரியஸான ஆக்ஷன், அடுத்த காட்சியிலேயே வெடிச் சிரிப்பு என புதுமாதிரி திரைக்கதை. முதல் பாதியில் பெருமளவு காட்சிகள் சீரியஸாகவே போக, அடுத்த பாதியில் சிரிப்பும் அதிரடியும் சேர்ந்தே வருகின்றன. 

கான்ஸ்டபிள்கள் படும் பாடுகளை அருமையாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதே நேரம் காவல் துறையின் சிறப்புகளையும் 'ஆத்து ஆத்து' என ஆத்தியிருக்கிறார்கள்.. அதெல்லாம் உண்மையாக இருந்தால் எவ்வளவோ நல்லாருக்கும்தான்! கொலை செய்த ராஜேந்திரன் அன்கோ, தினேஷ் மற்றும் பால சரவணனிடம் மாட்டிக் கொண்டு படும் அவதியைச் சித்தரித்த விதம் வெடிச் சிரிப்பு. 'இப்படி ஒரு சனியன் உனக்கு பிள்ளையா இருக்கான்னு தெரிஞ்சிருந்தா உன்னைக் கொன்னே இருக்க மாட்டோம்', என்ற ராஜேந்திரனின் புலம்பல் செம. அதே நேரம், ஒரு சீரியஸ் காட்சியின் தொடர்ச்சியாக நக்கலான காட்சி அல்லது நகைச்சுவை வருவதால், அந்த சீரியஸ் காட்சியின் பாதிப்பே இல்லாமல் போவதையும் குறிப்பிட்டாக வேண்டும். 


நாயகன் தினேஷுக்கு இன்னும் குக்கூ பாதிப்பு நீங்கவில்லை. அதனாலேயே அவரது உடல் மொழி செம கடுப்பாக்குகிறது. போலீஸ் ட்ரெஸ்ஸும் பொருந்தவில்லை. பல காட்சிகளில் தேமே என்று நிற்கிறார். இரண்டு மூன்று படங்கள் பண்ண பிறகும் முன்னேற்றமில்லையே.... கொஞ்சம் மாத்திக்கங்க தினேஷ். நாயகி ஐஸ்வர்யாவுக்கு எந்த வேலையும் இல்லை. காட்சிகளில் அங்கும் இங்கும் நடப்பதோடு சரி. ராஜேந்திரனும், ஜான் விஜய்யும் கவனிக்க வைக்கிறார்கள். ராஜேஷ், நரேன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். நரித்தனத்தை அசலாகக் காட்டியிருக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் முத்துராமன். பால சரவணன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதி ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போடுகிறார். அந்தப் பாடலும் இசையும் ஓகே. ஆனால் மற்ற பாடல்கள், பின்னணி இசையில் சிறப்பு ஏதுமில்லை. யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமலேயே, இப்படி ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் ராஜூ. நல்ல பொழுதுபோக்குப் படம்!


« PREV
NEXT »