மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நகுலேஸ்வரனின் மனைவி கவிதா அப்பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. அவர்களிற்கு குழந்தைகளும் உள்ளன.
Social Buttons