கடந்த சனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேக்கா போட்டியிட்டதற்கும், இப்போது ஆளும் பிரதான கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அதே களத்தில் குதிப்பதற்குமிடையே பாரிய வேறுபாடுண்டு.
சபாநாயகராக, பாதுகாப்புச் செயலாளராக, அபிவிருத்தி அமைச்சராக எந்தக்குடும்ப உறுப்பினரையும் போடலாம். ஆனால் நாடளாவிய கட்சிமட்டத்தில் செல்வாக்குள்ள ஒருவர்தான், பொதுச் செயலாளராக வரமுடியும். இப்போது 50- 150 கோடிக்கு பேரம்பேசும் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது இந்த பொதுச் செயலாளரின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம்.
சோதிடசிகாமணிகள் நாள்குறித்து நடாத்தப்படும் இத்தேர்தலில், சனாதிபதியைப்போல் விருச்சிகராசியில் பிறந்த ஒருவர் எதிரணி பொதுவேட்பாளராக இருந்தால் நிலைமை என்னாகுமென்று யோசித்துப் பாருங்கள்.
மூன்றாவது முறையாக சனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்கக்கூடிய வகையில்தான் 18 வது திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. ஒரே இரவில் எதிரணியின் பொதுவேட்பாளராக மாறியுள்ள மைத்திரிபால சிறிசேனாவும் இதற்கு ஆதரவளித்தவர்தான். இது குடும்ப ஆட்சிக்கு வித்திடப்போகிறது என்று அப்போது இவரால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.
அதிகார பீடத்தை மாற்றிவிடவேண்டும் எனத் தீர்மானித்தபின்னர் , இப்படியெல்லாம் மக்கள் கேள்விகேட்பார்கள் என்று கவலைப்படக்கூடாது. எல்லோருமே ஒரே சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் குடும்பம்.
பிளவுபடும் சொந்தக்கட்சியின் வாக்குகளும், யு.என்.பியின் ஒட்டுமொத்த வாக்குகளும், தம்புள்ள- மாவனெல்ல கோபத்திலிருக்கும் முஸ்லிம்களின் வாக்குகளும், கூட்டமைப்பு சொல்லாவிட்டாலும் மகிந்த ஆட்சிக்கு எதிராக போடப்படும் தமிழர் வாக்குகளும், மனோ கணேசன் ஊடாக வரும் கணிசமான மலையக மக்களின் வாக்குகளும் சேர்ந்து, தனது வெற்றியை நிர்ணயிக்கும் என்கிற நம்பிக்கையோடுதான் மைத்திரிபால சிறிசேன களத்தில் இறங்கியிருப்பார்.
ஆனால் இங்கு ஒரு ஆச்சரியமான பேரம் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது .
அதாவது நிபந்தனைகள் பேரங்களாகவும், இன்னொருபுறம் கட்சியை கைப்பற்றும்
போட்டிக்களமாகவும் இது மாறியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன 100 நாள் சனாதிபதியாகவும், இரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், பதக்கங்களையும் ஓய்வூதியத்தையும் இழந்த ஜெனெரல் சரத் பொன்சேக்கா பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்க வேண்டும் என்கிற முடிவு எட்டப்பட்ட நிலையிலேயே பொது எதிரணி தோற்றம் பெற்றுள்ளது.
இதில் தமிழர் தரப்பிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்களைத் தவிர வேறெவரும் பொது எதிரணி உருவாக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கபில ஹெந்த விதாரனையின் புலனாய்வுப் பிரிவிற்கே சவால்விடும் வகையில், மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டு ஒரு அரசியல் காய் நகர்த்தல் நிகழ்ந்திருக்கிறது.
முதலில் சஜித் பிரேமதாச குழம்பாதவகையில், கருஜெயசூரியாவை வேட்பாளராக முன்னிறுத்தி பெரும் பிரச்சாரம் ஒன்று நடைபெற்றது. மறுபுறத்தில், சிங்கப்பூருக்குச் சென்றுள்ள மங்கள சமவீர, ஆளும் கட்சிக்குத் தாவப்போகிறார் என்கிற பரப்புரை எல்லோரும் நம்பக்கூடியவகையில் மேற்கொள்ளப்பட்டது. மைத்திரிபால சிறிசேனாவை வேட்பாளராக இறக்கும் செய்தியினை இரகசியமாக வைத்திருக்க இவ்வாறான பல நம்பக்கூடிய திசைதிருப்பல் நாடகங்கள் உருவாக்கப்பட்டன.
அதேவேளை எதிரணியின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் நிலை சற்று வித்தியாசமானது.
அது குறித்துப் பார்க்க வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பிரதி அமைச்சர் பதவியும் தமக்குக் கிடைக்காமல் போய்விடக்கூடும் என்று கட்சியின் பல மூத்தகுடிகள் புலம்புவதை கவனிக்க வேண்டும்.
பிரதமர் பதவி சமல் இராஜபக்சவிற்கா அல்லது கோத்தபாயாவிற்கா என்கிற உரையாடல் வெளிவந்த போதே, கட்சியின் நீண்டகாலத் தூண்கள் உசாராகிவிட்டன.
அதேவேளை ஒதுங்கியிருந்த சந்திரிகா அம்மையாருக்கும், தமது ஆண்டபரம்பரையை மீண்டும் தூக்கி நிமிர்த்த வேண்டும் என்கிற அந்திமகால ஆசை துளிர் விட்டிருக்கும். இருதரப்பினரின் பரஸ்பர தேவைகளும், ஆசைகளும் இவர்களை பொதுப்புள்ளி ஒன்றில் இணைத்திருக்கின்றது.
தற்போதைய சனாதிபதியை வெளிச்சக்தி ஒன்றினால் வெல்லமுடியாது என்பதால், உள்ளிருந்தவாறு அந்நியமாகி நின்ற சக்திகளை வைத்து போட்டிக்களம் திறக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேக்கா என்ற வெளிச்சக்தியைவிட , மைத்திரிபால சிறிசேன என்கிற உள்வீட்டு ஆயுதம் பலமானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய யுத்தம், பிராந்திய ஆதிக்க மோதலின் விளைவு என்பதை விரைவில் நாம் புரிந்து கொள்ளலாம். உள் முரண்பாடுகளையும், வெளி முரண்பாடுகளையும் எவ்வாறு ஒன்றுசேர கையாள்வது என்பது குறித்து, இந்த பிராந்திய மேலாதிக்க வல்லரசாளர்களிடம் 'மாவோ' கற்றுக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.
அதேவேளை இரணில் தேர்தல் களத்தில் நின்றிருந்தால், ' பிரிவினை கோரும் புலம்பெயர் புலிகளின் சூழ்ச்சி' என்று மகிந்த ஆட்சியாளர்கள் வாட்டி எடுத்திருப்பார்கள். ஆனால் மைத்திரிபால அக்களத்தில் நிற்பதால், அவருக்கு புலிமுத்திரை குத்தமுடியாமல், ஏகாதிபத்தியங்களின் சதி என்று கத்த ஆரம்பித்துள்ளார்கள்.
இருப்பினும் உலகத்தமிழர் பேரவையின் (!) பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள், 'மகிந்தா தோற்றால் போர்க்குற்ற விசாரணை நிச்சயம்' என்று கொழும்பு ஊடகமொன்றில் ஊதிய சங்கொலி , அரசதரப்பின் புலி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனை முறியடிக்க 'சேம் சைட்' கோல் அடிக்கவேண்டிய நிலைக்கு சஜித் பிரேமதாச போன்றோர் தள்ளப்பட்டுள்ளார்கள். மகிந்தரை விசாரணையிலிருந்து காப்பாற்றுவோமென அவர் சூளுரைத்துள்ளார்.
இதில் எம்.எஸ் ( மைத்திரிபால சிறிசேன )தோல்வியுற்றால் , சந்திரிகாவின் பெருங்கனவு கலையும். மறுபுறத்தில் எம்.ஆர் (மகிந்த ராஜபக்ச) இன் இருப்பு சுதந்திரக்கட்சிக்குள் நிரந்தரமாகி விடும்.
எம்.எஸ்ஸைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய அரசியல் சூதாட்டம். விழுந்தால், கட்சிமட்டத்தில் இதுவரை உருவான ஆளுமை நொடிப்பொழுதில் நொறுங்கிப்போகும்.
அரசியல் வாழ்வு சூனியமாகிவிடும்.
இந்த அரசியல்- அதிகார பேரத்தில் முக்கியமான பகுதி என்னவென்று தெரியுமா?.
எம்.எஸ், சனாதிபதி பதவியை இழப்பார். இரணில் பிரதமர் பதவியைத் தக்க வைப்பார். இறுதியில் எம்.எஸுக்கு கட்சி மட்டுமே மிஞ்சும். இது சாத்தியமாகுமா?.
சனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பேன் எனப் பதவிக்கு வந்த சந்திரிகா குமாரணதுங்க ,முன் வைத்த காலைப் பின்வைத்த வரலாறு போல, தேரர் கூறும் உத்தரவாதத்தை மைத்திரிபால மீறமாட்டாரென்று கூறமுடியுமா?. அதிகாரத்தைப் பங்கு போடுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே மோதல் உருவாகாதா?.
மீண்டும் இரணில் - சந்திரிக்கா நடாத்திய திரிசங்கு இரட்டை ஆட்சிபோல், இரணில் - மைத்திரிபால ஆட்சி நிகழவும் வாய்ப்புண்டு.
இரணில் -சந்திரிக்கா-மைத்திரிபால- சமரவீரா கூட்டிற்கு, அதாவது இந்த விசித்திர கூட்டணிக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான சமூக- பொருளாதார-அரசியல் காரணிகளை முன்வைக்க வேண்டும். சிலவேளைகளில் சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகி விடலாம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் என்ன நடக்கும் என்பது குறித்தும் மக்கள் சிந்திப்பார்கள். ஏனெனில் எதிரணி வேட்பாளரும் நேற்றுவரை மகிந்த ராஜபக்சவுடன் பாற்சோறு சாப்பிட்டவர்தான். ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்ய முனைபவர், மக்களின் அடிப்படைப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும்.
குடும்ப ஆட்சி மட்டுமல்ல, தவறான பொருளாதாரக் கொள்கைகளும் வரிச்சுமைகளும், தென்னிலங்கை மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான உணர்வுகளை அதிகரித்திருக்கின்றன.
மலையக மக்களின் அடிப்படை நிலப்பிரச்சினை பூதாகரமாகி, அவர்களை பேரினவாதச் சேற்றில் புதைத்துக் கொண்டிருக்கிறது. மாவனெல்ல புகை மூட்டம் இன்னமும் மறையவில்லை.
இந் நிலையில் பெரும்போர் ஒன்றின் ஊடாக பெருவலி சுமந்து வாழும் , வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேர்தல் குறித்தான நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென்கிற அறிவுரைகளும், வாதப்பிரதிவாதங்களும் ஊடகப்பரப்பில் ஆரம்பித்திருப்பதை காணலாம்.
குறிப்பிடத்தக்க வாதங்களாக சிலவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
1. தமிழர் தரப்பு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். ( சுமந்திரன் அதற்குப் பொருத்தமானவர் என்று பேசிக்கொள்கிறார்கள்)
-விருப்பு வாக்கினை வைத்து பேரம் பேசலாம் என்பதுதான் இவர்களின் வாதம்.
2. தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
-இதனூடாக சர்வதேசத்திற்கு, தென்னிலங்கை அரசின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள்.
3. சனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்.
-இதன் மூலம் பொறுப்புக் கூறக்கூடிய சனநாயக -நல்லாட்சி நிறுவப்பட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்பு காப்பாற்றப்படலாம் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.
4. சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எம்மீது அழுத்தங்களை செலுத்துவதால், ஆட்சியோடு இருந்துதான் அதனை எதிர்கொள்ள வேண்டுமென சில கிழக்கு முஸ்லிம் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆகவே மகிந்த ஆட்சியை ஆதரியுங்கள் என்கின்றனர்.
இந்த வாதங்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
அதற்கிடையில் பல கட்சி தாவல்கள், கொடுக்கல்-வாங்கல்கள் நடைபெறலாம்.
ஏனெனில் இது அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த போட்டி.
வல்லரசாளர்களுக்கோ தமது நலனைக்காக்கும் ஆட்சி அமைய வேண்டுமென்கிற ஆதங்கம்.
தமிழ் மக்களிடம், 'எவர் வந்தாலும் என்ன ஆகப்போகிறது' என்ற விரக்தி இருந்தாலும், வலியைத் தந்தவன் அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்ற கோபமும் சேர்ந்தே இருக்கிறது.
No comments
Post a Comment