Latest News

October 26, 2014

காணாமல்போனோர் நினைவுநாள் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்
by Unknown - 0

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் நாளை திங்கட்கிழமை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
தங்களை அச்சுறுத்தும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு நடந்துவருகின்றது.
இம்முறை 24வது ஆண்டாக நடக்கும் இந்தத் தேசிய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதத்தில் அவர்களின் வீடுகளுக்கு அருகே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்த நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ளவுள்ள ஊடகவியலாளர் விக்டர் ஐவன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ, பாடகர் ஜயதிலக்க பண்டார உள்ளிட்ட பலரின் படங்களுடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நீர்கொழும்பிலும் கொழும்பிலும் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக சிவில் அமைப்புகளை அச்சுறுத்தும் விதத்திலான பல்வேறு சுவரொட்டிகள் கொழும்பின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்ததாக பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்தார்.
1989 காலப்பகுதியில் காணாமல்போதல்களுக்கு எதிராக சிவில் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தங்களின் பிரதிநிதியாக ஜெனிவாவுக்கு சென்றதையும் பிரிட்டோ பெர்ணான்டோ தமிழோசையிடம் நினைவுகூர்ந்தார்.
'மகிந்த ராஜபக்ஷ மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தபோது, எங்களின் இந்த காணாமல்போனவர்களுக்கான நினைவு தினத்துக்கு சிறப்பு பேச்சாளராக வந்து பேசியிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஒருவர் காணாமல்போனாலும் கூட தான் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவேன் என்று அன்று கூறிச்சென்றார்' என்றார் பிரிட்டோ பெர்ணான்டோ.
'மகிந்த ராஜபக்ஷ 1989இல் நடந்துசென்ற கால்தடங்களில் தான் நாங்களும் செல்கின்றோம். அவர் அந்தப் பாதையை கைவிட்டுவிட்டார். ஆனால் நாங்கள் இன்னும் தொடர்கின்றோம். அன்று அவர் செய்ததில் அரைவாசி அளவு செய்வதற்கு கூட எங்களுக்கு இன்று இடமளிக்கப்படவில்லை' என்றும் கூறினார் பிரிட்டோ.


---Thanks bbc tamil--
« PREV
NEXT »