Latest News

October 29, 2014

வடக்கு மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு தொடர்ந்தும் தடைகள் - கமலேஷ் சர்மா கவலை
by admin - 0

வடக்கில் தொடரும் அதிகரித்த இராணுவ தலையீடுகள் குறைக்கப்பட்டு, மக்களின் சுதந்திர நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள கமலேஷ் சர்மா இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கோரிக்கை முன்வைத்தார்.

தனது இலங்கை விஜயம் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்த அவர், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி எதிர்கட்சித் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன் சில விடையங்களில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் விடையத்தில் அரசாங்கம் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், வடக்கில் வாழும் மக்களின் நலன்புரி சேவைகள் தொடர்பிலும் இந்த அக்கறை காண்பிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அபிவிருத்தியையும், செழிப்பையும் நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்குஇ நிரந்தர ஒற்றுமையுடாக அமைதியை நிலைநாட்டுவது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளவர்களினதும், மக்களினதும் அதிகாரங்களை வலிமைப்படுத்துகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கும் நடமாட்டங்களை கண்காணிக்கும் நடைமுறை முழுமையாக கைவிடப்பட்டு சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும் சர்மா இலங்கை அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் இராணுவத்தினரின் தலையீடுகளும் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அது மாத்திரமன்றி தற்போது எழுந்துள்ள இந்த சூழலை வடக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்களும் சரிவர பயன்படுத்திஇ வளங்களை முழுமையாக மக்களுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள தேர்தல் ஆணையாளர் அலுவலகம் முழுமையான சுதந்திரத்துடன் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலையும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேர்தல் ஆணையம் முழுச் சுதந்திரத்துடன் செயற்படாமை குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்த கமலேஷ் சர்மா, பொதுநலவாய நாடுகள் அமைப்பில் முழு உறுப்புரிமை கொண்ட நாடொன்று சுதந்திரமான தேர்தல் ஆணையகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்ற அனுபவங்களை நாம் இலங்கையுடன் பகிர்ந்துகொள்வோம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments