Latest News

September 15, 2014

மக்களின் காணிகளை இராணுவத்திற்க்கு ஒருபோதும் கொடோம் - முதலமைச்சர்
by Unknown - 0

எமது மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் இருப்பதற்கோ அவற்றை எடுப்பதற்கோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே விரைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து இன்று பிற்பகல் 3மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து பேச்சுக்களை நடாத்தியதுடன் 7 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் அவரிடம் கையளித்திருந்தனர். அதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு -கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் என்பனவற்றை மையப்படுத்தி 7 அம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை முதலமைச்சரிடம் கையளித்து பேச்சுக்களை மேற்கொண்டிருந்தோம். குறித்த மகஜரில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை உள்ளடக்கியதாக அமைவு பெற்றுள்ளதுடன் முக்கிய விடயமாக மீள்குடியேற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு முதலமைச்சரும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் அவர்களது பொருளாதாரத்தினை அபிவிருத்தியடைவதற்கு நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். அத்துடன் சில காரணிகளையும் முன்வைத்துள்ளோம்.

01. இந்திய இழுவைப்படகினால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும்.

02. வட புலத்து மீனவர்களை ஒன்றிணைத்து பொது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உதவுதல்.

03. சட்ட விரோத மீன்பிடி முறைகளை முழுமையாக தடை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

04. தென்னிலங்கை மீனவர்களது வருகையால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.

05. வலி.வடக்கு மக்களது பிரச்சினையை மிகவும் முக்கிய பிரச்சினையாக கொண்டு அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தல்.

06. மீனவ சமூகம் சார்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல். 

07. வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களது இணையம் என்ற ரீதியில் மாகாண மட்ட மீனவர்களின் பிரச்சினையை ஆராயும் குழுவில் எமது அமைப்பையும் இணைத்து கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடினோம். எமக்கு சாதகமான பதிலையே முதலமைச்சர் வழங்கியிருந்தார். அதற்கமைய மீன்பிடி மற்றும் இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு மத்திய அரசின் கடற்றொழில் அமைச்சரே பதில் கூறவேண்டும். எனவே அவருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விரைவில் பதிலளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் மீனவ குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள்,  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பிலான பிரச்சிகைள் தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களும் ஆராய்ந்து எமக்கு சமர்ப்பித்தால் அதன்படி நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் தெரிவித்தார். 

அத்துடன் வலி.வடக்கு மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .தொடர்ந்தும்  எடுப்போம். எமது மக்களுடைய காணிகளை இராணுவம் எடுப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஒரு போதும் இடமளிக்க கூடாது. எனவே அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார் என இணைப்பாளர் மேலும் தெரிவித்தார். 
« PREV
NEXT »