Latest News

August 18, 2014

புலிப்பார்வையில் நீக்கப்படவுள்ள 3 காட்சிகள்...
by admin - 0

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவா, தமிழ்ஈழம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர் அமைப்பினர் சிலர் இத்தாக்குதலில் எங்கள் கட்சிக்கு தொடர்பு இருப்பது போல அவதூறு தகவல்களை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். அதில் சீமான் பற்றியும் தேவையில்லாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. 

ஒரு விழா நடைபெறும்போது அதில் பங்கேற்ற மாணவர்கள் திடீர் என எழுந்து கோஷமிட்டு அநாகரீகமான நடந்தது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் அவர்கள் தாக்கப்பட்டதும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர் கட்சியினர்தான் மாணவர்களை தாக்கினார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நாங்கள் எந்நேரமும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம். அதுமாதிரி யாராவது நடந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். 

புலிப்பார்வை திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் நிலையில் அதில் இடம் பெற்று இருக்கும் 3 விதமான காட்சிகளை நீக்குவதற்கு சீமான் வலியுறுத்தி உள்ளார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சீருடையில் இருப்பது போன்ற காட்சியை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தரிடமும் இயக்குனர் பிரவின்காந்தியுடனும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல விடுதலைப் புலி அமைப்பில் உள்ள பெண்கள் வயிற்று பசிக்காக கன்னிவெடி தாக்குதலில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் மனிதாபிமானமுற்ற முறையில் இருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகளையும் நீக்க சொல்லி உள்ளோம். தற்போது படத்தின் இசை வெளியிட்டு விழா மட்டுமே நடந்து உள்ளதாலும், படம் வெளியாகும்போது இந்த 3 காட்சிகளும் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி காட்சிகள் இடம் பெற்றால் அதனை எதிர்த்து நாம் தமிழ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  பேட்டியின்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், அறிவுச் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிடையே புலிப்பார்வை படம் சம்பந்தமாக போலீஸ் கமிஷனரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘புலிப்பார்வை திரைப்படத்தில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை தீவிரவாதிபோல சித்தரித்துள்ளனர். இந்த படம் வெளியானால் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »