ஐக்கிய நாடுகள் சபையின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்கக்கூடாது என டெசோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கை உள்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் டெசோ அறிவித்துள்ளது.
டெசோ எனப்படும் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் அவசரக் கூட்டம் இன்று காலையில் சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நான்கு தீர்மானங்கள்
இந்தக் கூட்டத்தில், “நரேந்திர மோதி தலைமையிலான அரசு இலங்கைப் பிரச்சனைக்குத் அரசியல் தீர்வுகாண முன்வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் பிடித்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்பதோடு, அவர்கள் சந்தித்துவரும் துயரங்களுக்கு முடிவுகட்டும் வகையில் நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. குழுவின் விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கும் அந்தக் குழுவிற்கு அதற்கான விசாவை வழங்குவதற்கும் இந்திய அரசு முன்வர வேண்டும்.
ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவையோ, அந்நாட்டின் சார்பில் வேறு எந்தப் பிரதிநிதியையுமா கலந்துகொள்ள அனுமதிக்க்க்கூடாது” ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றை வலியுறுத்தும் வகையில், செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலையில், சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாகவும் டெசோ அறிவித்துள்ளது.
Social Buttons