தமிழ் இனத்திற்கு எதிராக யார் படம் எடுத்தாலும் நான் எதிர்ப்பேன்.. ஆனால் தம்பிகள் விஜய், ஏ ஆர் முருகதாஸின் கத்தியை எதிர்க்க மாட்டேன்," என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஈழப் பிரச்சினையில் போராட வேண்டிய கால கட்டத்தில் தனி மனிதனாக ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் பெயரையும், ஈழத்தையும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பேசியவன் நான். நம் தமிழ் இனத்திற்கு எதிராக ஒரு திரைப்படத்தை எடுத்து அதை வெளியிட நான் எப்படி ஆதரவு கொடுப்பேன். இதற்கு முன்னால் நம் இனத்திற்கு எதிராக வந்த ‘டேம் 999' படத்தையும், சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இனம்' திரைப்படத்தையும் நாம் தமிழர்கள் எதிர்க்கவில்லையா? ‘புலிப்பார்வை' திரைப்படத்தை நண்பர் பிரவீன்காந்தி எடுத்து முடித்தவுடன் எனக்கு போட்டுக் காண்பித்தார். படம் பார்த்து முடித்து விட்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லி விட்டேன். அவரும் நீக்குவதாக ஒப்புதல் அளித்தார்.
தமிழ் இனத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ‘தேன்கூடு' படம் இன்னும் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் படத்தை வெளி கொண்டு வர முடியவில்லை. அதைக் கேட்க இங்கு யாரும் இல்லை. ஈழம் சம்பந்தமாக நம் இனத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ‘தேன்கூடு' படம் வெளிவர போராடாதவர்கள் இன்று என்னை கேள்வி கேட்கிறார்கள். தமிழ் இனத்திற்கு எதிராக யார் படம் எடுத்தாலும் நான் எதிர்ப்பேன். ஆனால் ‘கத்தி' படம் என் இனத்திற்கு எதிரான படம் அல்ல. முருகதாசும், விஜய்யும் தமிழ்ப் பிள்ளைகள். அதன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ‘லைக்கா' நிறுவனத்தை எதிர்ப்போம்.
அதற்காக ‘கத்தி' படத்தையோ, விஜய்யையோ எதிர்க்க முடியாது. ஈழம் பற்றி படம் எடுக்க வருவோர்கள் அங்கு என்ன நடக்கிறது? என்பதை முழுவதும் தெரிந்து கொண்ட பின்னர் படம் எடுங்கள்," என்றார்.
Social Buttons