சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவனான யோகநாதன் நிரோஜன், பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) என்ற மாணவனும் மற்றுமொரு தமிழ் மாணவனும் கடந்த 5ம் திகதி முற்பகல் 11 மணியளவில் கடத்தப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன் பின்னர், குறித்த இரு மாணவர்களும் பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் இன்று வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மாணவனின் தந்தையான எஸ்.யோகநாதன் தெரிவிக்கையில்,
எனது மூத்த மகன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாணவனாக கற்று வருகின்றார்.
தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார்.
அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பொழுது கடந்த 05.08.2014 அன்று எனது மகனை சிலர் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிய நேற்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் சென்றோம். அவர்கள் தமக்கு தகவல் கிடைத்துள்ளது, எனது மகனை பலாங்கொட பொலிஸார் கைது செய்து கொழும்பில் தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தற்போது எனது மகனைத் தேடி கொழும்பு செல்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் குறித்த மாணவனின் கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற புலனாய்வு துறையினர், அவரது விவரங்களைப் பெற்றுள்ளனர். எதற்காக விவரம் எடுக்கின்றீர்கள் என கேட்ட போது "எதுவும் வேலை வந்தால் கொடுப்பதற்கு" என்று கூறினார்கள் என மாணவனின் தாயார் தெரிவித்தார்.
மேற்படி மாணவனை கைது செய்யும் போது நேரில் கண்ட சக மாணவன் ஒருவன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 5 ஆம் திகதி அன்று பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அப்போது எமது பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இந்திக்கா என்ற விரிவுரையாளர், நிரோசனின் பரீட்சை இலக்கத்தை கூறி அவரை வருமாறு அழைத்து, அங்கிருந்து கூட்டிச் சென்றார்.
இந்த நிலையில் பல மணி நேரங்களுக்கு பின் நிரோஜனை வளாகம் முழுவதும் தேடிய போதும் காணவில்லை. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடாக நிரோஜனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிந்துகொண்டோம் என்றார்.
Social Buttons