Latest News

August 14, 2014

பல்கலைக்கழக மாணவன் சுதர்சனின் மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணை தேவை- சிவசக்தி ஆனந்தன்
by Unknown - 0

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் மீதான தாக்குதலுக்கும் பின்னர் தாக்குதலுக்குள்ளான மாணவரை பயங்கரவாதியாகச் சித்திரிக்கப்பட்டமையைக் கண்டித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் முகமாலையைச் சேர்ந்த மாணவரான சந்திரகுமார் சுதர்சன் பல்கலைக்கழக வளாகத்தினுள் தாக்குதலுக்குள்ளாகி இருவேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் வைத்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஒரு பயங்கரவாதியாகச் சித்திரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது கவலையளிப்பதுடன் கண்டனத்திற்குமுரியது.

வைத்திய அதிகாரிகளின் அறிக்கையானது அவர் தாக்கப்பட்டதனாலேயே காயமுற்றதாகக் கூறுகின்றபோது காவல்துறையினர் அவர் தன்னைத்தானே தாக்கிக்கொண்டதாக வாக்குமூலமளித்திருப்பதாகக் கூறுவது இந்நாட்டு மக்கள் அனைவரையும் மூடர்களாக முயற்சிக்கும் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது பாடசாலைக் கல்வியை வெற்றிகரமாக முடித்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறத்தக்க வெட்டுப்புள்ளிகளையீட்டி தமது கல்விக்கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளைஞரை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்று காவல்துறை பேச்சாளர் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல.

இந்நடவடிக்கையானது ஏற்கனவே புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட எவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமாட்டார்கள் என்ற சந்தேகத்திலேயே இந்நாட்டின் காவல்துறை உள்ளது என்பதை நிரூபிப்பதாக இருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு நிலவவில்லை. இதனை பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதியின் கூற்றே தெளிவாக்குகின்றது. உண்மை நிலை இவ்வாறிருக்க பல்கலைக்கழகத்திற்குள் வந்து மாணவனைத் தாக்கியது யார்? என்பது தொடர்பில் விரிவானதும் நேர்மையானதுமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டிய காவல்துறையினர் அடிபட்டவர்மீது குற்றம் சுமத்தி இன அடிப்படையில் விசாரணையை மேற்கொள்வது நீதியானதாகத் தெரியவில்லை.

தாக்கியோரை கைது செய்வதற்கு பதில் தாக்குதலுக்கு உள்ளானவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஏனைய தமிழ் மாணவர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இல்லையேல் மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும் என்றும் சுவரொட்டிகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதான் இந்நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடா?

மேற்கண்ட சம்பவமானது சப்ரகமுவ பல்கலைக்கழகம் உட்பட இந்நாட்டில் வடக்கு-கிழக்கு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் தமிழ் மாணவர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பல்கலைக்கழங்களின் நிர்வாகத்தினரும் உயர்கல்வி அமைச்சும் பாதுகாப்பு தரப்பினரும் முன்வர வேண்டும்.

தமது பிள்ளைகள் உரிய காலத்தில் பட்டப்படிப்பை முடித்து நல்லதொரு வேலையில் அமர்ந்து குடும்பப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்று பெற்றோரும் பெற்றோருக்கு சுமையாக இல்லாமல் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று மாணவர்களும் விரும்புகையில் எவ்வாறு அவர்கள் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்?

இங்கு இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மாணவன் காயமுற்றிருந்த செய்தி கேட்டு சிரேஸ்ட மாணவரான வவுனியா சின்னடம்பனைச்சேர்ந்த மாணவன் யோகநாதன் நிரோஜன் என்பவர் காயடைந்த மாணவரைப் பார்க்கச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீpதிமன்றத்தினால் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சக மாணவரைச் சந்திப்பது குற்றமா? அது ஒரு மனிதாபிமானச் செயற்பாடாக காவல்துறையினருக்குத் தெரியவில்லையா? அவ்வாறு சந்தித்தவரையும் கைது செய்தது ஏன்?

காவல்துறையினரின் அண்மைய செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர் சந்திரகுமார் சுதர்சன் என்ன காரணத்திற்காகவோ தன்னைத்தானே தாக்கிக்கொண்டு விடுதி வாசலில் மயங்கி விழுந்து பின்னர் சக மாணவர்களின் துணையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற நேர்மையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிக்கொணர சம்பந்தபட்டவர்கள் முன்வரவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டிப்பதற்கு மாணவ சமுதாயமும் கல்விச்சமூகமும் முன்வரவேண்டும். இதனை இப்பொழுதே கண்டிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் அனைத்து சமூகத்தினருக்குமே ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே இன, மத, மொழி வேறுபாடின்றி நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அரசின் அராஜகத்தையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் கண்டிப்பதற்கு முன்வரவேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »