மஹிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்சவுடன் நடனமாடிய நடிகை சமீரா ரெட்டியை தமிழ் சினிமாகாரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதனால் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது என தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்த தடையை மீறி இலங்கை சென்ற நடிகை அசினை, நடிகர் சங்கம் கண்டித்தது. இன்று வரை அவரால் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் வைக்கவே முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுடன் நடிகை சமீரா ரெட்டி மிக நெருக்கமாக இருக்கும் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமலுடன் மிக நெருக்கமாக இருக்கும் சமீரா ரெட்டியை கண்டித்து, இந்து மக்கள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது,
"ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலகமே கண்டிக்கிறது. இந்த நிலையில், அவரது மகன் நாமலுடன் சமீரா ரெட்டி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.
சமீரா ரெட்டியை தமிழ் திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்," என்று அக் கட்சி தெரிவித்துள்ளது.
இன்னொரு முன்னணி நடிகையான கங்கனா ரணவத்தும் (தாம் தூம் பட நாயகி) இலங்கைக்குப் போய் ராஜபக்சே மாளிகையில் விருந்துண்டு, ஆட்டம் போட்டுவிட்டு வந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது என அந்த இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Social Buttons