இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி கடந்த 2009 மே தொடக்கம் கடற்படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை காலை வெடிபொருட்கள் மீட்பு பிரிவினருடன் பெருமளவு படையினர் குறித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்று மோசமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக கூறப்படும் பகுதியில் மக்கள் மீள்குடியேறவும், கைவிடப்பட்ட தங்கள் உடமைகளை மீட்கவும் அனுமதிக்கப்படாமல் கடந்த பல வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலத்தை சுவீகரிக்கப் போவதாக கடற்படையினர் அண்மையில் அறிவித்திருந்தனர். இது விடயமாக அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் வடமாகாண முதலமைச்சருக்கு எழுத்துமூலமாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இலங்கை இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் பிரிவினருடன் இணைந்து அப்பகுதிக்குள் பெருமளவு படையினர் புகுந்ததாக மக்கள் கூறுகின்றனர்.
முன்னர் படையினர் அப்பகுதியில் உள்ள வெடிபொருட்களை அகற்றியிருக்க கூடும் என நம்பப்பட்ட போதும் அவ்வாறு பின்னர் நடக்கவில்லை. எனக் கூறும் மக்கள் உள்ளே சென்ற படையினர் கடற்கரை ஓராமாக போர் காலத்தில் பாவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட காப்பரண்கள், மற்றும் பதுங்கு குழிகளை தோண்டிக் கொண்டிருந்ததை கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்ததாகவும் கூறுகின்றார்கள்.
எனினும் எதற்காக அவ்வாறு பதுங்கு குழிகள் தோண்டப்பட்டன? என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் எச்சங்களை அழிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Social Buttons