Latest News

July 04, 2014

இனஅழிப்பு ஆதாரங்களை அணிதிரட்டும், ஒருங்கிணைக்கும் பணியில் -"இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம்"
by Unknown - 0

இலங்கைத்தீவின் கலானித்துவ காலம்தொட்டு சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர்கள் மீதான இனஅழிப்புத் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் ஒருங்கிணைக்கும் செயல்முனைப்பினை  தனது முதலாவது பணியாக இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் 2013ல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் லண்டனில் மேற்கொள்ளப்பட்டிருந்த இனஅழிப்புத் தடுப்பு மாநாட்டினை தொடர்ந்து இந்த மையம் தோற்றம் பெற்றிருந்தது.
இந்த மையம் இனஅழிப்பினால்  பாதிக்கப்பட்ட அல்லது  இனஅழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அனைத்து மக்களுக்கும் தனது சேவையை ஆற்றும் வகையில் சுயாதீனமாக இயங்கும் என தெரிவித்துள்ள இந்த மையத்தின் இயக்குனர் நாயகம் பேராசிரியர்  எம். சொர்ணராஜா அவர்கள் இலங்கையில் நடந்த இனஅழிப்பில் கவனம் செலுத்துவதே இதன் உடனடிச் செயலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேராசிரியர்  எம். சொர்ணராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உலகத்தின் பல பாகங்களில் உள்ள மற்றைய தமிழ் அமைப்புகளால் ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளை திரும்பவும் செய்ய நாம் விரும்பவில்லை.  ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நாம் அதனை ஐ. நா. ம. உ. சபையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழு  உட்பட எந்த ஆணைக்குழுவிற்கோ,  நீதிமன்றுக்கோ வழங்க முடியும்.
உங்களின் ஒத்துழைப்பை இது விடயத்தில் எதிர்பார்க்கிறோம். ஜூலை 1, 2014 முதல் இந்த ஆதாரங்களை திரட்டும் முயற்சியினை சுயாதீனமாகத் தொடங்கியுள்ளோம். . நீங்கள் விரும்பினால் எங்களால் சேகரிக்கப்படும் ஆதாரங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்வோம்.
இந்தச் சந்தர்பத்தில் மையம் பின்வரும் மூன்று முக்கிய பணிகளை செய்வதில் கவனம் செலுத்தும் என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்.
(அ) உலகின் எந்த பகுதியிலும் ஏற்பட்ட இனஅழிப்புக்கான அல்லது இனஅழிப்பு அச்சுறுத்தலுக்கான ஆதாரங்களை திரட்டுதல். இலங்கைத் தமிழருக்கெதிராக இனஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வெய்ப்பதே எமது முக்கிய கவனமாக இருக்கும். மிகவிரைவில் இதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கவிருக்கிறோம். இந்த முயற்சியின் போது பெறப்படும் அனுபவங்களை இனஅழிப்பு அச்சுறுத்தலுக்குட்படும் ஏனைய மக்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.
(ஆ) பல்வேறு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின்முன் வழக்குத் தொடுக்கும் நுட்பங்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு அவை மற்றவர்களுடன்  பகிர்ந்து கொள்ளப்படும்.
(இ) இனஅழிப்பு பற்றிய சட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் இனஅழிப்பு நிகழாமல் தடுக்கவும் கடந்த காலங்களில் இனஅழிப்பு நிகழ்த்தியவர்களை பொறுப்புக் கூற வெய்க்கக் கூடியதுமான சட்டம்  ஒன்றை உருவாக்க ஆக்கப்பூர்வமாக தேடுதல் செய்யப்படும். இனஅழிப்பினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின்  பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையத்தின் இயக்குனர் நாயகம் பேராசிரியர் எம். சொர்ணராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்செயல்மையத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்ற ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த 0044 786 913 30 73 இந்த தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
« PREV
NEXT »