ஐக்கிய இராச்சியத்தின் (ஸ்கொட்லாந்து) Glasgow நகரில் நடைபெறவுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாயத்தின் விளையாட்டுப் போட்டியினை தலைமைதாங்கி தொடங்கிவைக்க வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைமை தாங்கும் நாடாக சிறிலங்கா உள்ள நிலையில், அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக இவ்விளையாட்டுப் போட்டியினை தலைமைதாங்கி தொடங்கி வைக்க இருக்கின்றார்.
இந்நிலையில் சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Glasgow நகரில் யூலை 23ம் நாளன்று இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடலில், பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றுபட்டு ஓர் குரலாய் அணிதிரளுமாறு உரிமையோடு அழைப்பு விடுவதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு அறைகூவல் விடுத்துள்ளது.
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பின் இரத்தம் தோய்ந்த வரலாற்று தடமாகவுள்ள, கறுப்பு யூலையின் நாளில் சிறிலங்கா அரசுத்தலைவரின் வருகை அமைகின்றது.
சிறிலங்கா அரசுத்தலைவரது வெளிநாட்டுப் பயணங்களில், ஐக்கிய இராச்சியத்துக்கான பயணம் கசப்பான அனுபவமாக, மகிந்த ராஜபக்சவுக்கு அமையும் வகையில், பிரித்தானியத் தமிழர்களின் எதிர்ப்பு கடந்த காலத்தில் அமைந்துள்ள நிலையில், இம்முறையும் அவ்வாறான வலுவானதொரு எதிர்ப்பினை பதிவு செயது, ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பினை அம்பலப்படுத்துவோம் என நா.க.தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons