மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர். லம்பேர்ட் இரண்டாவது தடவையாக மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.ஆர். லம்பேர்ட் தெரிவிக்கையில்,
மன்னார் மூர் வீதியில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு மன்னார் பொலிஸாரினூடாக நேற்று வெள்ளிக்கிழமை அழைப்பாணைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
326-14 இலக்கம் கொண்ட குறித்த கடிதத்தில் ஊடகவியலாளரான எஸ்.ஆர்.லம்பேர்ட் என்பவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு (ரி.ஐ.டி) காரியாலயத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஏன்? எதற்காக விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றேன் என்ற விடயம் இதுவரை தெரியவில்லை. கடிதத்திலும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் இதே ஊடகவியலாளர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 09ம் திகதியன்று முதல் தடவையாக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது இணையத்தில் இருந்து வெளிவந்துள்ள சில செய்திகள் தொடர்பாகவும், குறிப்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டதாக ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லம்பேர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons