கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் இரண்டு பிரிவு மக்களிடையில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை இந்த பதற்றத்தின்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக இந்த மோதல் சம்பவம் வெடித்துள்ளது.
முஸ்லிம் சிங்கள தரப்புக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுத்கம மீரிபின்ன மற்றும் சாபுல கந்த ஆகிய வீதிகளில் உள்ள வீடுகள் சில தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேத விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.
பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அளுத்தம பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பௌத்த பிக்குவிற்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு இடம்பெற்றதைக் கண்டித்து, இன்று பொதுபல சேனா ஊர்வலம் நடத்தியிருந்தது.
ஊர்வலத்தின்போது முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதையடுத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அளுத்கம தர்ஹா நகரில் 10க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.
பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் இறங்கியதையடுத்து இந்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்களுக்கு கல் வீசப்பட்டிருக்கிறது.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல் வீசித்தாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons