பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழர்கள் இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முகம்கொடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையின் போது பாலியல் வன்புணர்ச்சியை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாடு லண்டனில் நேற்று செவ்வாயக்கிழமை ஆரம்பமான போது அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிளும் மேற்படி சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கிய பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அகதிகள் விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சே கையாள்வதாகவும் குறித்த அமைச்சு இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அடைக்கலம் கோருவோருக்கு ஒரு திறந்த நாடாக பிரித்தானியா திகழ்வதாக குறிப்பிட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அதற்கான ஒழுங்குகள் உரிய முறையில் பேணப்படும் எனவும் யாராவது இந்த ஒழுங்குகளை பேணவில்லை என தெரிந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதி அஞ்சலினா ஜொய்லி பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்தார்.
பெண் போராளிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அன்டனியே கட்டரஸ் நாளை வியாழக்கிழமை மாநாட்டுக்கு வரும் போது அவரது கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் இலங்கையில் பாரிய சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டும் குடிவரவு தொடர்பான சட்டத்தரணியாக செயற்படும் குலசேகரம் கீதாத்தனன் எனினும் இவ்வாறான சித்தரவதைகள் தொடர்ந்த போதிலும் பிரித்தானியா தொடர்ந்தும் தமிழர்களை நாடு கடத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.
Social Buttons